Mutur Diary
மூதூரின் பழமைகளை தேடி ஓர் பயணம்
09/09/2026
#மூதூரின் வரலாற்று பக்கத்தில் இருந்து.
1786ம் ஆண்டு டச்சு அதிகாரியான ஜாக்ஸ் ஃபேப்ரிஸ் வான் சென்டன் (Jacques Fabrice van Senden) திருகோணமலையின் கொட்டியாரப் பகுதியில் விரிவான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார்.
அவரின் முதல் இலக்கே இயற்கை எழில் கொஞ்சும் மூதூர் கிராமம்தான். (டச்சு மொழியில் Moedoer என அழைத்தனர்)
அவர் கண்டறிந்த கள யதார்த்தங்கள்,
பரந்த விவசாய நிலங்கள் இருந்தும், உடனடித் தேவையைத் தாண்டி மேலதிக நெல்லை மக்கள் சேமிக்கவில்லை.
தொடர்ச்சியான ஐரோப்பியப் படையெடுப்புகள் மற்றும் அதிக வரி விதிப்புகளால் மக்களிடையே அதிருப்தியும் பயமும் நிலவின.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் சிறுவர்களைப் பாதித்த தொற்றுநோய்களால் மக்கள் தொகை (வேலையாட்கள்) பெருமளவில் குறைந்திருந்தது.
இவற்றைக் கருத்தில் கொண்டு, வரிகளை ஒத்திவைப்பதாக வாக்குறுதியளித்து, மேலதிக விவசாய விதைகளை வழங்கி விவசாயத்தை ஊக்குவித்தார் வான் சென்டன்.
அன்று மூதூரில் வாழ்ந்த சுதேசித் தமிழர்கள் "மலபார்கள்" என அழைக்கப்பட்டனர், அவர்கள் மீன்பிடி, நெற்செய்கை மற்றும் உள்ளூர் நிர்வாகங்களில் முதன்மையாக ஈடுபட்டனர்.
மூதூரில் வாழ்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் "மூர்ஸ்கள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் கண்டி அரசிற்கும் கடலோரப் பகுதிக்கும் இடையிலான பண்டமாற்று வர்த்தகம், துறைமுகப் படகோட்டுதல், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
வான் சென்டன் ஆய்வின்படி #மக்கள்_தொகை, மூதூரில் மொத்தமாக 114 வளர்ந்த ஆண்கள் வாழ்ந்ததாகவும், ஏனைய கிராமங்களில் ஆண்களின் எண்ணிக்கை 5 முதல் 10 ஆக மட்டுமே இருந்ததாகவும், பெரும்பாலானவை கடலோர விவசாயக் குடியிருப்புகளாகவே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அண்டை கிராமங்களின் இயல்புகள்
அன்றைய காலத்தில் மூதூரை உள்ளடங்கிய கொட்டியாரப் பகுதி ' #வன்னியர்' எனப்படும் குறுநிலத் தலைவர்களின் கீழ், கண்டி அரசிற்கு உட்பட்டு இருந்தது. பின்னர் அந்த நிர்வாகம் டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு வரி செலுத்தும் கிராமங்களாக மாறின.
#தோப்பூர், நெற்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பின் முக்கிய மையமாகவும்,
#கிளிவெட்டி & #கங்குவேலி கிராமங்கள் மகாவலி ஆற்றின் கிளையாறுகள் மற்றும் சிறு குளங்களை நம்பியிருந்த விவசாயக் கிராமங்களாகவும்,
#சம்பூர் கிராமம் மீன்பிடி, படகுப் போக்குவரத்து மற்றும் உப்பளத் தொழில் சார்ந்த பகுதியாகவும் இருந்தது.
தொடர்ச்சியான போர்கள், நோய்கள் மற்றும் மருத்துவ வசதியின்மையால் பல கிராமங்கள் கைவிடப்பட்டு, குளங்களின் கரைகள் உடைந்து, காடுகளாக மாறின.
விவசாயத்தை ஊக்கிவித்து உற்பத்தியை பெருக்க நீர்ப்பாசனச் சிக்கல்களும் தொலைநோக்குத் திட்டங்களும் வகுக்கவேண்டி இருந்தது.
மகாவலி ஆற்றில் பாய்ந்து வரும் நீர், முறையான அணைகளோ வாய்க்கால்களோ இல்லாததால் கடலில் வீணாகக் கலந்தது. இதனால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது.
இதனைச் சீரமைக்க வான் சென்டன் டச்சு கிழக்கிந்திய கம்பனிக்கு முன்வைத்த சில பரிந்துரைகள்,
உடைந்துபோன குளக்கரைகளையும் மதகுகளையும் புதுப்பித்தால், திருகோணமலைக்கே தேவையான முழு நெல்லையும் மூதூரிலிருந்தே பெற முடியும்.
உள்ளூர் வன்னியத் தலைவர்கள் மூலம் மக்களை ஒருங்கிணைத்துக் குளங்களைத் தூர்வார வேண்டும்.
காடடைந்த நிலங்களைச் சீரமைப்போருக்கு வரிவிலக்கும், விதை நெல்லும் வழங்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக... இத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதே ஆண்டுகளில் பிரித்தானியர் ஆட்சியைக் கைப்பற்றியதால், டச்சுக்காரர்களின் இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வராமலேயே போயின.
வான் சென்டன் அவரது குறிப்பில் மூதூர் கங்குவேலி கிராமத்தில் அமைந்துள்ள #அகத்தியர்_தாபனம் (கங்குவேலி பிள்ளையார் கோயில்/சிவன் கோயில் வளாகம்) பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டின் செய்தியினையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் காலம்: பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு (யாழ்ப்பாண அரசு / வன்னியர் ஆட்சிக் காலம்).
திருக்கோணேஸ்வரம் பெருமானுக்கு (கோணாநாயகர்) 'மலையின வன்னியனார்' மற்றும் 'ஏழூர் அதப்பர்' ஆகிய வன்னிய தலைமை நிலக்கிழார்களால் வழங்கப்பட்ட நெல் வயல்கள், புல்வெளிகள் மற்றும் கிராம வருவாய் சார்ந்த கொடைகளைப் பற்றி இக்கற்தூண் கல்வெட்டு விவரிக்கிறது.
என தமிழில் எழுதப்பட்டுள்ளதாக விவரித்துள்ளார்.
குறிப்பு: பொ.ஊ. என்பது கி.பி என்பதற்கு பதிலாக (பொது ஆண்டு) என்பதை குறிக்க பயன்படுத்தப்படுவதாகவும்.
Category
Telephone
Website
Address
Main Street
Trincomalee
31200
Alerts
Be the first to know and let us send you an email when Mutur Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.