Qrius Learning Initiatives
Qrius works with schools to improve literacy and numeracy skills in children. To put it simply, we h
Qrius works with schools to promote child-friendly literacy and numeracy education
02/07/2026
இனிக்கும் கணக்கு – 112
கணக்குப்பிள்ளைக் காத்தவராயன்
அறைக்கதவு திறந்தே இருந்தது. இருந்தாலும் கதவில் மெதுவாக இரண்டு தட்டுத் தட்டுவிட்டு "உள்ளே வரலாமா?" என்று கேட்டாள் மஞ்சு.
"வா வா... உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" என்றார் அர்ச்சனா அண்ணி.
"ஓ... அப்படியானால் எனக்காக வேறொரு செயல்பாட்டை யோசித்திருக்கிறீர்கள் அப்படித்தானே?" என்றாள் மஞ்சு.
"ஆம். சரி செயல்பாட்டுக்கு வருவோம். நடனமாடும் எண்கள் என்று நான் சொன்னால் உன் மனத்தில் உதிக்கும் கருத்து என்ன?"
"நடனமாடும் எண்களா? எண்கள் கண் காது மூக்கு வைத்து கதாபாத்திரங்களாக மாறிவிட்டனவா?"
"இல்லை"
"நடனக் கலைஞர்களின் கால்கள் மேடையில் போடும் கோலத்தின் அளவுகளா...?"
"நடனக் கலைஞர்கள், மேடை ஆகியவை சரி. உனக்கொரு குறிப்பு தருகிறேன்"
"சொல்லுங்கள் சொல்லுங்கள்..."
"குழுநடனம்"
"குழுநடனத்திற்கும் எண்களுக்கும் என்ன தொடர்பு?"
"சரி. இப்போது நான் சொல்லும் எண்களை எழுதிக்கொள். குழுநடனம் என்று நான் ஏன் சொன்னேன் என்று புரியும்"
மஞ்சு குறிப்பேட்டைத் திறந்து எண்களை எழுத ஆயத்தமானாள்.
142857
285714
428571
571428
714285
857142
எண்களை எழுதிக்கொண்டே இருந்த மஞ்சு... "ஓ எனக்குப் புரிந்துவிட்டது. புரிந்துவிட்டது" என்று கூவினாள்.
"குழு நடனத்தின் போது நடனக் கலைஞர்கள் சுழன்று சுழன்று ஆடுவார்கள். பிறகு வரிசையில் நிற்கும்போது முன்பு முன்னால் நிற்பவர்கள் பின்னால் போகலாம். பின்னால் நிற்பவர்கள் முன்னால் வரலாம். இல்லையா...?"
"அதேதான்"
"வேறொருவர் வந்து இணையவோ, குழுவில் உள்ளவர் விட்டுப்போகவோ செய்வதுமில்லை"
"மிகச் சரி. இந்த ஆறு எண்களை முதல் எண்ணை ஒன்றால் இரண்டாவது எண்ணை இரண்டால், மூன்றாவது எண்ணை மூன்றால் என வகுத்துப் பார் உனக்கோர் ஆச்சரியம் காத்திருக்கிறது"
"சற்று நேரம் தாருங்கள். செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்" என்றபடி மஞ்சு ஈவு காணத் தொடங்கினாள். மூன்று வினாக்களுக்கு விடை கண்டுபிடித்ததுமே அவளுக்கு அந்த ஆச்சரியம் என்னவென்று புரிந்தது.
"ஓ இவர்கள்தாம் நடனக்குழு அடிப்படை உறுப்பினர்களா?
"ஹ் ஹ ஹா அப்படியும் சொல்லலாம்"
"இந்த நடனக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைப்பவர் அல்லது நடனக்குழுவை நடத்திச் செல்பவர் யார் என்று தெரிய வேண்டுமா?"
"நிச்சயமாக. அதற்கு என்ன செய்ய வேண்டும்?"
"857142 உடன் இந்த அப்படி உறுப்பினர்களைக் கூட்டிப் பார்த்தால் தெரியும்"
கூட்டுத்தொகையைப் பார்த்த மஞ்சு "இவர் மறுபடியும் தன் முக்கியத்துவத்தைக் காட்டிவிட்டார்" என்று உரக்கச் சிரித்தாள்.
அவள் மனத்தில் ரஷ்யா நாட்டு அரசு நடனமான பாலே நடனத்தை இணையத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
தன் அறைக்குச் சென்றாள். அந்த நடனத்தைப் பார்த்தாள். எண்களின் நடனத்திற்கும் அந்த பாலே நடனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
"உலகின் எல்லா இடங்களிலும், எல்லா செயல்களிலும் எண்கள் நடனமாடுவது அவள் அகக்கண்களுக்குப் புலப்பட்டது"
உங்களுக்கு?
28/06/2026
Let Grow Challenge...
ஒரு பத்து வயதுப் பெண்குழந்தை கைபேசிக்காக அடம் பிடிக்கிறது. பெற்றோர் அரை மனதோடு வாங்கிக்கொடுக்கிறார்கள். ஒரு மாதத்திற்குள் அந்தக் குழந்தை, ஆம் பத்து வயதுதானே ஒரு பதினான்கு வயதுப் பையனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டது.
பிறகு இரண்டு மூன்று நாட்களுக்குள் திரும்பி வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் அனுபவித்தது நரக வேதனை.
அக்காவும் தங்கையும் கைபேசி பார்ப்பதைச் சொல்லி வழக்கிட அம்மா கைபேசியை வாங்கி வைக்க, அக்காக்காரி கோபித்துக்கொண்டு, அம்மா சமையல் கட்டில் இருக்கும் நேரம்பார்த்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, ஊராரெல்லாம் தேடி, தோழிகளின் வீட்டில் விசாரித்து... ஒரு தனியார் பேருந்திலிருந்து குழந்தையைக் கண்டுபிடித்து கூட்டி வந்துள்ளார்கள்.
அந்த சிலமணி நேரங்கள் அந்தப் பெற்றோர் அனுபவித்தது நரக வேதனைக்கும் மேல். இவை அங்கங்கு நடக்கும் நிகழ்வுகள் என்றிருக்க முடியவில்லை.
இச்செய்தி நான்கைந்து நண்பர்களிடம் அழைத்துப் பேசத் தூண்டியது. அவர்களுக்கு பத்து வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோரும் கூறிய சில கருத்துகள் இதோ:
பெரும்பான்மையான வீடுகளில் கைபேசி யாருக்கும் தெரியாமல் பல பிரச்சனைகளை விதைக்கிறது.
குழந்தைகள் கண்டதைப் பார்க்கிறார்கள் என்பது ஒருபக்கம். கண்டதுக்கெல்லாம் கைபேசி பார்க்கிறார்கள் என்பது மறுபக்கம். வீட்டினருடன் பேசுவதே இல்லை என்பது அதன் வேறொரு பக்கம்.
பேச்சு குறைவதால் உறவுப்பாலம் பலவீனமாகிவிடுகிறது.. வீடுகளில் சிரிப்பு சத்தம் குறைந்துவிட்டது எடுத்ததுக்கெல்லாம் எரிஞ்சு விழுவது அதிகமாகிவிடுகிறது.
கைபேசியில் இருக்கும் பல செயலிகள் வீட்டில் இருக்கும் நேரத்தையும் அலுவலக நேரமாக மாற்றிவிடுகின்றன. இது பெற்றோர்களையும் நெருங்க விடுவதில்லை.
குழந்தை ஏதேனும் பிரச்சனை உருவாக்கும்போது மட்டுந்தான் அப்பாவும் பேசுகிறார்கள் என்றார் வீட்டிலிருந்த ஒரு பெரியவர்.
நான்கைந்து நண்பர்கள் கூறியவற்றுள் பொதுவான ஒன்று என்பது வீட்டில் பேச்சு குறைகிறது என்பது. நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
பேச்சு குறைவதால் என்ன பிரச்சனை?
இருவர் பேசும் சூழலைக் கவனித்திருக்கிறீர்களா? தகவல் தேடும் வினாக்களுக்கு அவ்வளவு பெரிய இடம் இல்லை. அதே நேரத்தில் ஒருவருடைய கருத்தைக் கேட்கும் கேள்விக்கு, ஆலோசனை கேட்கும் கேள்விக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. அநதக் கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்லுவார் என்று நம்மால் அவ்வளவு எளிதாக ஊகித்து விட முடியாது. மற்றொன்று அவர் பேசுவது பல நேரங்களில் நமக்குச் சட்டென புரியாது. பல நேரங்களில் அதைப் பற்றி மேலும் யோசிக்க வேண்டியிருக்கும். காரணம் அவர் கூறுவது அந்த நேரத்து மனநிலை, சூழல், நினைவுகூரும் திறமை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.
இதுதான் பேச்சு தரும் சுகம். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? அதற்குள் உட்குத்து ஏதாவது இருக்குமோ? ச் சே அப்படியெல்லாம் இருக்காது. அன்று பேசும்போது உள்ளோர் எண்ணம் வைத்துப் பேசவில்லையே என்றெல்லாம் நாம் யோசிப்போம் பார்த்தீர்களா... இது மூளைக்குப் பெரிய நன்மை செய்கிறது.
இத்தோடு நாம் விட்டுவிடுவதில்லை. நாம் நண்பர்களிடம் பகிர்வோம். இதைப் பகிரும்போது அந்தப் பேச்சு மேலும் வளரும். நாம் பேசுவது நண்பனுக்குப் புரியாது. காரணம் உண்மையான நிகழ்வின் சில அம்சங்கள் நாம் கூறும்போது தரையில் விழுந்து சிதறிப்போகும். அவன் புரியாமலே வேறொரு கருத்தைச் சொல்லுவான். இதும் மூளைக்கு நல்லது.
இது நம் வகுப்பில் பல விடை வினா கேட்பதின் பின்னணியில் மறைந்துள்ள கருத்து என்பதை மறந்துவிடாதீர்கள்.
சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உலக நாடுகளில் எங்கெல்லாம் என்னென்ன நடக்கிறது என்று பார்த்தால் சில மீட்டெடுக்கும் வேலைகள் அங்கங்கு ஆரம்பித்துள்ளன.
அம்மாக்கள் முதலில் ஒருங்கிணைத்துள்ளார்கள். பிறகு அப்பாக்களும் இணைகின்றனர். சில இளைஞர் அமைப்புகளும் இவர்களுக்கு உறுதுணைக்கு வருகின்றனர். சில ஆட்சியாளர்களும் வருகிறார்கள்.
நாமே திறந்துவிட்ட அந்த பூதத்தைக் குப்பியில் அடைப்பதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
ஸ்வீடன் நாடு கைபேசிகளைத் திரும்பப் பெற்று பாடப்புத்தகங்களை மீண்டும் கொடுத்துள்ளது. குறிப்பேட்டில் பென்சிலால் எழுதுங்கள் என்று குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பள்ளி வராந்தாக்களில் சிரிப்புச் சத்தம் கேட்டது என்று புல்லரிக்கிறார்கள் ஆசிரியர்கள்.
ஆஸ்திரேலியா 16 வயதுக்கு மேலேதான் கைபேசியில் ஏதேனும் ஒரு கணக்கு துவங்கலாம் என்று சட்டம் கொண்டுவந்துள்ளது. அதைப் பல நாடுகள் பின்பற்ற முன்வந்துள்ளன. ஆனால் எனக்குப் பிடித்தது வேறொரு முயற்சி
Let Grow என்பது அந்தத் திட்டத்தின் பெயர். குழந்தைகளால் அந்தந்த வயதில் என்னென்ன செய்யமுடியும் என்பதை யோசிக்கிறார்கள். அதை அவர்களைச் செய்ய வைக்கிறார்கள். ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
சாலையோரம் அம்மா காருக்குள் அமர்ந்திருக்க, ஏழு வயது மகனிடம் சற்று தூரத்திலுள்ள கடைக்குச் சென்று உணவு வாங்கி வரும்படி அனுப்புகிறார். அவரும் வருகிறார். அம்மாவை நெருங்கும்போது "ஆகா இது நல்லாயிருக்கே" (That was fun) என்றபடியே வருகிறார்.
அம்மாவோ "எப்படி இருக்கு இந்த அனுபவம்?" என்று கொஞ்சம் போட்டு வாங்குகிறார். "கால்கள் எல்லாம் நடுங்கின. இருந்தாலும் இன்னும் இதைச்செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது" என்றாராம் அந்த மகன்.
இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்த இடம்.
குழந்தைகள் எதையாவது சுயமாகச் செய்வது, வெற்றியையோ தோல்வியையோ அனுபவிப்பது, பிறருடன் பகிர்வது, மீண்டும் முயற்சி செய்வது, அதைவிடச் சற்று சவாலான வேலையில் ஈடுபடுவது... என்பது
இப்போது நடுநிலைப் பள்ளி குழந்தைகளிடம் நாம் நடத்திய ஆய்வின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கணிப்பான் வந்தபோது, கணினி வந்தபோது, ஏற்பட்ட பெருங்குழப்பங்களும் நம் பயம் கலந்த எதிர்காலக் கணிப்புகளும் நினைவுக்கு வருகின்றன. எப்போதும் சற்று வயதானவர்கள் ஒரு மாற்றம் வருவதை, சமூகம் முன்னேறுவதை கவலையோடுதான் பார்ப்பார்கள் என்ற முன்விதிக்கு உடனே வராதீர்கள்.
இது சற்று வேறுபட்டதுபோல தோன்றுகிறது. ஆழமான ஆபத்தை உருவாக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. காரணம் சுற்றும் காணும் விளைவுகள் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அந்தப் பயத்தை மேலும் கூட்டுகின்றன.
யுவல் நோவா ஹராரி சொல்வது போல் இதோர் ஏலியன் இன்டலிஜன்ஸ்.. தானாக முடிவெடுக்கிறது தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. பயன்படுத்தும் உங்களை வலையில் வீழ்த்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்கிறது. மீண்டும் மீண்டும் தன்னிடம் வரவழைக்கும் தந்திரங்களை அழகாகப் புரிந்து வைத்திருக்கிறது.
இதைப் பற்றித் தெரிய விழைபவர் Grooming gang என்று தட்டச்சு செய்து பார்ப்பது நல்லது. பெண் குழந்தைகள் உள்ளவர்கள் மயங்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல.
Let Grow திட்டம் போல நாமும் யோசிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக வகுப்பறைகளில்
அடுத்தடுத்து சின்னச் சின்ன ஆய்வுகளுக்கு ஆயத்தமாக இருங்கள்.
ஜி. ராஜேந்திரன்
26/06/2026
நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே
ஒரு மொழி ஆய்வு
பின்னணி
1, 2, 3 வகுப்புக் குழந்தைகள் ஆசிரியர் கூறும் சிறு கதையை, குறு நிகழ்வைக் கவனிக்கிறார்கள்.
இறுதியில் கேட்கப்படும் பல விடை வினாவுக்கு விடையளிக்கிறார்கள்.
தாங்கள் கூறிய விடைகளுள் எது பாடப்பகுதியில் வந்துள்ளது என்று உற்சாகமாகத் தேடுகிறார்கள்.
இந்த உற்சாகம் செயல்பாடுகளிலும் தொடர்கிறது.
இவை துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியவை. அப்படியானால் நடுநிலைப் பள்ளி மாணவர்களாலும் முடிய வேண்டுமே. ஆனால் அதற்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படவில்லை. அப்படியானால் வேறு எப்படி பரிசோதிப்பது என்ற ஆலோசனையில் உருவானதுதான் இந்த ஆய்வு.
நடுநிலைப் பள்ளி மாணவர்களால் எவ்வித உதவியும் இல்லாமல் சற்று கடினமான பாடலின் பொருளை, தற்போது பயன்பாட்டில் இல்லாத சொற்களின் எண்ணிக்கை அதிகமாகக் கொண்ட பாடலின் பொருளை ஊகிக்க முடிகிறதா?
என்பதுதான் ஆய்வின் அடிப்படை.
செயல்பாடு
கீ்ழ்வரும் கம்ப ராமாயணப் பாடலை எதுவும் கூறாமல் அமைதியாகக் கரும்பலகையில் எழுதுதல்
சேலுண்ட ஒண் கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்பச் செர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை.
உங்களால் பொருளை ஊக்கி முடியுமா என்று கேட்டல். போதுமான நேரம் கொடுத்தல். ஊகித்த பொருளைப் பகிர்தல், அவர்களுக்குள்ளேயே கலந்துரையாடுதல்
விளைவுகள்
ஆசிரியர்கள் கவனித்தவை
1. எதுவும் பேசாமல் கரும்பலகையில் எழுத எழுத மாணவர்கள் வாசித்துக் கொண்டே வந்தார்கள். இது ஓர் அழகான உத்தி.
2. உங்களால் இதன் பொருளை ஊகிக்க முடியுமா என்ற கேள்வி மிக முக்கியமானது. அவர்களால் முடியும் என்று நாம் நினைக்கிறோம் என்பதின் ஆதாரம். மற்றொன்று முயற்சி செய்து பார்ப்போமே என்ற உத்வேகம் . மூன்றாவது மிக முக்கியமாக. ஆசிரியர்கள் எதுவும் கூறாமலே தங்களுக்குள் கலந்துரையாடுதல்...
3. மிக முக்கியமாக, அதற்குப் பிறகும் நாம் கூறும் குறிப்புகளின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆசிரியர் கூறுவதற்கு எதிரான, பொருத்தமில்லாத கருத்துகள் வரும்போது நம் மீது ஏற்படும் மதிப்பிழப்பை இது தடுக்கிறது.
அப்படியானால் அடுத்தது என்ன? நாம் பாடம் நடத்தும் முறையில் மாற்றங்கள் தேவையா? யோசிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் கூறியவை
(வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தது. அதனால் திருத்தாமல் அப்படியே பதிந்துள்ளேன்.)
சார் வணக்கம் நான் வகுப்பிலிருந்த படி பின்னூட்டம் அளித்ததால் மிக விரிவா என்னால அப்ப சொல்ல முடியல ....தொடக்கத்தில் எனக்கும் அரி சார் சொல்ற மாதிரி இந்த பாடல் ரொம்ப கடினமா இருக்குமோ... கொஞ்சம் எளிமையா இருந்தா நல்லா இருக்குமோ... அப்படின்னு இந்த மாதிரியான தயக்கம் இருந்தது வகுப்பில் நடந்ததைப் பார்த்த
எனக்கு ஆச்சரியமா இருந்தது என்னன்னா... குழந்தைங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்களுக்குள்ளயே கலந்துரையாடிக்கிட்டாங்க...ஒரு மாணவி அன்னப்பறவை மீனத்தின்னுமா அப்படின்னு கேட்க இன்னொரு மாணவி இல்ல இல்ல அன்னப்பறவை பால் தான் குடிக்கும் பாலையும் தண்ணீரையும் வேறு வேறா பிரிக்கும் அப்படி எல்லாம் அவங்களுக்குள்ள ஒரு கலந்துரையாடல் போச்சு...அப்புறம் ஒரு மாணவன் அன்னப்பறவை நீரில் தானே நீந்தும் அப்ப சேலுண்ட ஒன்கனாரில் னா மீன் இருக்கிற தண்ணியா மிஸ் அப்படின்னு கேட்டான் Sir கேட்டுட்டு தான் மீன்களைப் போல் திரிகின்ற அன்னம் என்றான் ...அதேபோல் தேரைன்னா தவளையா ? தவளை யோட சத்தம் தான் தாலாட்டா ? இப்படி எல்லாம் அவர்கள் பேசிக்கிட்டாங்க... நான் குறுக்க புகுந்து எதுவும் சொல்லாம அவங்க சொல்றத மட்டும் கேட்டுகிட்டு இருந்தேன் நாளைக்கு அதுக்கான விளக்கம் நீங்க யோசிச்சுட்டு வாங்கன்னு சொல்லி இருக்கேன் சார்...நாளைக்கு சித்ரா மிஸ் சொல்கிற மாதிரி பாடலுக்கான சூழலை நானும் சொல்லிப் பார்க்கிறேன் என்ன நடந்தது என்று நாளைக்கு சொல்றேன் சார்...
சார் வணக்கம்...
சார் இந்த செயல்பாட்டை ஏழாம் வகுப்பிற்கு நடத்தி காட்டினேன்.இதை இரண்டு முறை நிறுத்தி நிதானமாக படித்து பார்த்துவிட்டு உங்களுக்கு
புரிந்ததைசொல்லுங்கஎன்றேன்.கொஞ்ச நேரம் மிகுந்த அமைதி ஒரு மாணவன் தயங்கி தயங்கி அன்னம் என்றால் சாப்பாடு தானே மிஸ் என்று ஆரம்பிதான்..
அடுத்தடுத்த மாணவர்கள் கன்றுனா
கன்றுக்குட்டி தானே..
தாலாட்டும், பச்சை, பள்ளி, வளர்த்திய, மழலை, பிள்ளை போன்ற சொற்கள் புரிகின்றது என்றனர். பின் நான் காலுண்ட, பாலுண்டு போன்ற சொற்களை பிரித்து எழுதி காண்பித்ததும் இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டனர்..
அது மட்டும் இல்லாமல்
எனக்கு ஆச்சர்யம்...
மழலை கு விளக்கம் கொடுக்கும்போது "மழலைச் சொல்
கேளதவர்"அப்படினு திருக்குறளை சொல்லி சொன்னார்கள் .நான் அவர்களின் social மிஸ்,
வெள்ளிக்கிழமை சமணப்பள்ளி பற்றிய விளக்கம் சொல்லும்போது ஆரம்ப காலத்தில் "பள்ளி " என்ற சொல்லிற்கு புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும் இடம் என்று சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு இங்கேயும் பள்ளி என்பது அதுதானே மிஸ் என்று என்னை வியக்க வைத்தனர்... நீங்க சொன்ன Megic
கொஞ்சமா ஆரம்பித்து விட்டது சார் நன்றி 🙏
சார் வணக்கம்...
கடைசி பிரிவேளையில் தான் வகுப்பில் பரிசோதிக்க முடிந்தது... மேலும் மேலும் பல பல ஆச்சரியங்கள்...
1)ஒரு சில மாணவர்கள் ராகத்தோடு பாட மற்றவர்களும் முயற்சி செய்தனர்.
2)சூழலை சொன்னதும்ஓரு மாணவன் காழுண்ட சேறுனா வயலை உழுத அந்த சேற்றிலா என்று கேட்டான்
3)மற்ற மாணவன் அப்போ சேற்றில் கன்று குதித்தால்
அன்னப்பறவை பறந்து போய்டுமா மிஸ் என்று கேட்டான்,
4)நான் பதில் சொல்வதற்குள் இன்னொரு மாணவன் ஆமாடா கன்று பக்கத்தில் குதிக்கும் போது அன்னம் மேல பறக்கும் கன்று தூரமா போய்ட்டா அன்னம் கீழ வந்துரும் என்றான். (நான் அவர்கள் சொல்வதை ரசித்து கொண்டிருந்தேன் -என் பிள்ளைகள் இப்படி பேசுவது புதிது )
5) மிஸ் இத கண்ணாமூடி பார்த்தா சூப்பரா இருக்கு மிஸ் என்றான். (எப்படிடானு கேட்டேன் )
6.மிஸ் பச்சை வயல்வெளி.. நிறைய பறவைகள்.. கன்று குட்டி விளையாடுவது
என்று கூறி என்னை ஆச்சரியப் படுத்தினான்.... நிறைய நடந்தது சார்....
வியப்பு..வியப்பு... பெருமை... பெருமை..
நீங்கள் எதிர் பார்த்தது நடந்து விட்டதுன்னு நினைக்கிறேன் சார் நன்றி
சார் வணக்கம்🙏
இன்று எட்டாம் வகுப்பிற்கு நீங்கள் சொன்ன இந்த செயல்பாட்டை நடத்தினேன் . . .
நீங்க சொன்னது போல எதுவுமே சொல்லாம கரும்பலகையில் இந்த பாடலை எழுதி போட்டேன் அந்த பாடலைப் என்ன புரியுதுன்னு பாருங்க ன்னு சொல்லி அமைதியா கொஞ்ச நேரம் விட்டு விட்டேன்
அவர்கள் கூறியது எல்லாம் கரும்பலையில் எழுதினேன் கிட்டத்தட்ட பொருள் தரும் சொற்களை கண்டுபிடித்து விட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது ...
நன்றிகள்
செயல்பாட்டைக் கூறியவுடன் உற்சாகத்தோடு முன்வந்து வகுப்பறையில் நடைமுறைப்படுத்திப் பின்னூட்டமிட்ட கீழ்வரும் ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. அரிபிரசாத்
2. அனன்சியா
3. சித்ரா
4. செந்தில்குமாரி
(இத்துடன் இணைத்துள்ள காணொளியைத் தவறாமல் காணவும்)
ஜி. ராஜேந்திரன்
22/06/2026
கற்பித்தல் என்பதும் ஓர் அல்கோரிதமே....
இச்செயல்பாட்டை வாசித்தால் புரியும் என்று நினைக்கிறேன்.
சில சுவையான கணிதச் செயல்பாடுகள் – 22
கீழ்வரும் குறிப்புகளை வரிசைப்படி குழந்தைகளிடம் கூறுங்கள்.
(ஒன்றிலிருந்து ஏழாவது படி வரை 5, 6, 7 வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லுங்கள். இரகசியம் கண்டுபிடிக்கும் பொறுப்பை உயர் வகுப்புக் குழந்தைகளிடம் சொல்லுங்கள்)
1. ஏதேனும் ஓரி ஈரிலக்க எண்களை எழுதுங்கள்.
2. அதை 20 ஆல் பெருக்குங்கள்.
3. கிடைக்கும் பெருக்குத் தொகையுடன் அந்த ஈரிலக்க எண்ணைக் கூட்டுங்கள்.
4. கிடைக்கும் கூட்டுத்தொகையை 481 ஆல் பெருக்குங்கள்.
5. கிடைக்கும் விடையைக் கவனியுங்கள். உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும்.
6. அந்த ஆச்சரியத்தை என்னிடம் சொல்வதற்கு முன்பு மேலும் மூன்றோ நான்கோ ஈரிலக்க எண்கள் எழுதி இதே படிகளைப் பின்பற்றிப் பாருங்கள். ஒவ்வொரு எண்ணுக்கும் இதே ஆச்சரியம் ஏற்படுகிறதா என்று கவனியுங்கள்.
செய்து பார்க்கப் போதுமான நேரம் கொடுங்கள்.
7. பெருக்குத் தொகையில் கண்ட ஆச்சரியத்தைக் கூற சில குழந்தைகளுக்கு வாய்ப்பளியுங்கள்.
8. கீழ்வரும் தொடர்க்கேள்விகளைக் கேளுங்கள். ஈரிலக்க எண்களுக்குப் பதிலாக ஓரிலக்க எண்ணைத் தேர்ந்தெடுத்து இதே படிகளைப் பின்பற்றிப் பெருக்கினால் பெருக்குத்தையில் இந்த ஆச்சரியத்தைக் காண முடியுமா?
- ஈரிலக்க எண்ணுக்குப் பதிலாக மூன்று இலக்க எண்ணைப் பயன்படுத்தினால் இந்த ஆச்சரியம் ஏற்படுமா?
- 10,. 20, 30... எனப் பத்தின் மடங்களைத் தேர்ந்தெடுத்து இதே படிகளைப் பின்பற்றினால் பெருக்குத் தொகையில் காணும் மாற்றங்கள் என்ன?
போன்ற வினாக்களைக் கேளுங்கள்.
8, 9, 10 மாணவர்களிடம் இச்செயல்பாட்டை நடத்திய பிறகு "விடையில் காணும் ஆச்சரியத்திற்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியுமா? அதற்கு முதலில் என்ன செய்வது? அடுத்து என்ன செய்வது?" என்று கேட்டுக் கலந்துரையாடலாம்.
அப்படி அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதற்கு முன்பு நாமும் ஒருமுறை இதை செய்து பார்ப்பது நல்லதல்லவா?
செய்து பாருங்கள். தொடர்க்கேள்விகளுக்கும் விடை காணுங்கள்.
நிச்சயமாக ஒரு பிரிவேளைக்குள் இதற்கான விடை கண்டுபிடிக்க முடியாது.
9. வீட்டிலிருந்து கண்டுபிடித்து வாருங்கள் என்று சொல்லும்போது மறவால் "அந்த இரகசியத்தை முதலில் எனக்கு மட்டும் சொல்லுங்கள். அது சரியா தவறா என்று நாம் பரிசோதித்துப் பார்த்த பிறகு வகுப்பிலுள்ள எல்லா குழந்தைகளுக்கும் நீங்கள் விளக்கிச் சொல்லலாம்" என்று சொல்லுங்கள்.
10. அப்படியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாத போது "நான் ஒரு குறிப்பு தருகிறேன். அதன் அடிப்படையில் யோசித்தால் சில வேளை உங்களால் இதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியும்" என்று சொல்லுங்கள்.
11. பிறகு கீழ்வரும் குறிப்புகளைச் சொல்லுங்கள்.
- ஒரு மூன்றிலக்க எண் எழுதுங்கள்.
- அதை 7 ஆல் பெருக்குங்கள்.
- கிடைக்கும் பெருக்குத் தொகையை 11 ஆல் பெருக்குங்கள்.
- கிடைக்கும் பெருக்குத் தொகையை 13 ஆல் பெருக்குங்கள்.
12. விடையில் காணும் ஆச்சரியத்திற்கும் நாம் முன்பு ஈரிலக்க எண்ணைத் தேர்ந்தெடுத்து செய்த புதிருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லுங்கள்.
13. நான்கைந்து நாட்களுக்குப் பிறகும் குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மட்டும் "ஓர் ஈரிலக்க எண்ணைத் தேர்ந்தெடுங்கள். அந்த எண்ணை 101 ஆல் பெருக்கிப் பாருங்கள். கிடைக்கும் விடையைக் கவனியுங்கள். இத்துடன் என் உதவி முடிந்தது. இனி உங்கள் கையில்" என்று சொல்லுங்கள்.
நாம் கவனிக்க வேண்டியது...
1. ஒரு போதும் இரகசியத்தை நாம் உடனே சொல்லாமல் இருப்பது நல்லது. அவர்களுடன் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதும், அவர்களைத் தேட விடுவதும் அவசியம்.
2. யார் யார் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்களுடன் இது தொடர்பான வினாக்கள் கேட்டால் புரிந்துகொள்ளலாம்.
3. சாட்ஜிபிடியைப் பயன்படுத்தியதற்குப் பாராட்டுங்கள். கூடவே "இது எப்படி நடக்கிறது? இதற்குப் பின்னாலுள்ள கருத்து என்ன? மூன்று இலக்கங்களுக்குப் பதிலாக நான்கு இலக்க எண்ணைத் தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும்? என்றெல்லாம் யோசியுங்கள். விடையை ஊகியுங்கள். பிறகு செய்து பாருங்கள்" என்று மறவாமல் சொல்லுங்கள்.
குழந்தைகளுடன் ஆசிரியர் ஆடும் "அழகான கண்ணாமூச்சி" ஆட்டமே கற்பித்தல்
ஜி. ராஜேந்திரன்
20/06/2026
இறங்குவதல்ல: உண்மையில் ஏறுவது
ஒரு கருத்தைக் குழந்தைகள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள், உண்மையில் புரிந்துகொள்வது என்றால் என்ன, குழந்தையின் அனுபவங்களோடு எப்படி தொடர்புபடுத்துவது போன்ற வினாக்களின் அடிப்படையில் கலந்துரையாடும்போது பெரும்பான்மையான ஆசிரியர் நண்பர்கள் கீழ்வரும் வாக்கியத்தைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
"குழந்தைகளின் லெவலுக்கு நாம் இறங்கிக் கற்பிக்க வேண்டும்"
ஆனால் உண்மையில் நாம் இறங்க வேண்டுமா இல்லை ஏற வேண்டுமா?
இப்பருவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1, 2, 3 வகுப்புகளுக்கான தமிழ்ப் பாடப்புத்தகத்தில் பாடத்தை நடத்துவதற்கு நான்கு படிநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். முதல் படிநிலை ஒரு சிறு நிகழ்வைக் கூறி முடிவில் ஒரு பலவிடை வினாவைக் கேட்பது.
கோழி குப்பையைக் கிளறுவது ஏன்?
புதிய மிதிவண்டியைப் பார்த்ததும் பழைய, சிறிய மூன்று சக்கர வண்டி என்ன நினைத்திருக்கும்?
போன்ற வினாக்கள் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
இத்தகைய திறந்த கேள்விக்குக் குழந்தைகள் கூறும் பதில்களைப் பார்த்தால் அவர்களைப்போல் நம்மால் சிந்திக்க முடியாது என்பது புரியும்.
கோழி குழி பறித்து அதில் தண்ணீர் நிரப்பி குளிக்க விரும்புகிறது. அதற்காகத்தான் குப்பையைக் கிளறுகிறது என்று நம்மால் ஒரு போதும் யோசிக்க முடியாது.
ஆசிரியர் திறன் வளர் பயிற்சியில் பங்கெடுக்கும் ஆசிரியர்களிடம் சில செயல்பாடுகளைக் கூறி அவற்றை வகுப்பில் நடத்திப் பார்த்து பின்னூட்டங்களைப் பகிரச் சொல்வது வழக்கம். அச்செயல்பாடுகளுள் சொற்கோபுரம் என்ற செயல்பாடும் ஒன்று.
அச்செயல்பாட்டில் என்ன புதுமை செய்துவிட முடியும் என்று தோன்றுகிறது அல்லவா... ஆனால் உண்மையில் குழந்தைகள் புகுந்து விளையாடினார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
• ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களாலான சொற்கோபுரம்
• ஒரே இறுதி எழுத்தும் வரும் சொற்களாலான சொற்கோபுரம்
• பூக்களின் பெயர்கள் மட்டும் கொண்ட சொற்கோபுரம்
• பள்ளியிலுள்ள பொருட்களின் பெயர்கள் மட்டும் சோற்கோபுரம்
• உணவுப் பொருட்களின் பெயர்கள் மட்டும் கொண்ட சொற்கோபுரம்
• உடல் உறுப்புகளின் பெயர்கள் மட்டும் உட்படும் சொற்கோபுரம்
• மிகப்பெரிய சொற்கோபுரம் (அடியில் 13 கட்டங்கள் வரை)
மட்டுமல்ல, கைபேசி தரமாட்டேன் என்று கூறினால் நம்மிடமிருந்து எந்தச் சூழலில் எப்படி கைபேசியைப் பெற்றுக்கொள்வது என்பது தெரியாத குழந்தை இந்த நாட்டிலே இல்லை.
அதனால் நாம் எப்படிச் சொல்ல வேண்டும்?
"குழந்தைகளின் லெவலுக்கு நாம் ஏறிக் கற்பிக்க வேண்டியிருக்கிறது"
என்று பணிவோடு சொல்ல வேண்டியிருக்கிறது.
அ...து...
ஜி. ராஜேந்திரன்
17/06/2026
ஒருவருடைய புரிதல் அவருடைய நடவடிக்கைகளை முடிவு செய்கிறது. அவர் அறியாமலே...
இந்தக் கருத்துக்கு எடுத்துக்காட்டான ஓர் அழகான பள்ளி அனுபவம் இதோ.
Activity Based Learning (ABL) திட்டம் நடைமுறையிலிருந்து காலம். இ்ம்முறை பல்நிலைக் குழந்தைகளை அல்லது பல வயதுக் குழந்தைகளை ஒரே வகுப்பில் வைத்து பாடம் நடத்துவதற்கு ஏற்றது.
இந்த முறைக்கேற்ப பல வகுப்புகளை ஒரே வகுப்பில் அமர்த்தி பாடம் நடத்தினார்கள். இக்கருத்துக்கேற்ப ஒன்று முதல் நான்கு வகுப்பு வரையுள்ள குழந்தைகளை மூன்றாகப் பிரித்து மூன்று ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார் தலைமையாசிரியர்.
பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இரண்டு ஆசிரிர்கள். ஒருவர் வாணி. அடுத்தவர் ராணி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொண்டீர்கள்தானே.)
இருவருக்கும் நிறைய பொருத்தங்கள் உண்டு. இருவருக்கும் குழந்தைகள் பால் அதீத அன்பு. குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். அல்லது படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இருவரின் இலக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பார்கள். பிறருடன் அன்பாகப் பழகுவார்கள்.
இவர்களுள் ஒரு வேறுபாடு என்னவென்றால்...
வாணி குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பார். அதுவும் எந்தளவுக்கு என்றால் இன்று நாம் விளையாடலாமா என்று குழந்தைகள் கேட்டால் சரியென்று அவரும் சேர்ந்து விளையாடச் சென்று விடுவார்.
ஆனால் ராணியோ, இன்று கற்க வேண்டியதை கற்பித்துவிட்டுத்தான் வேறு வேலை. கற்பிப்பார், மதிப்பீடு செய்வார், எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லையென்றால் பயிற்சி கொடுப்பார். அப்போதும் எதிர்பார்த்த விடை கிடைக்காவிட்டால் தண்டனை கொடுக்கவும் தயங்கமாட்டார்.
ஒரே பள்ளி என்பதால் வாணியின் வகுப்பில் நடப்பதை ராணியால் கவனிக்காமல் இருக்க முடியாது. அதுபோல் ராணியின் வகுப்பை வாணியும் கவனிப்பார்.
"என் குழந்தைகளைப் பாருங்கள். எல்லா பாடங்களையும் கற்றுவிட்டார்கள். குறிப்பேட்டில் பாதியை எழுதித் தீர்த்துவிட்டார்கள். நீங்கள் இன்னும் கதைபேசி, விளையாடிக்கொண்டே இருக்கிறீர்கள். நேரத்தைப் வீணாக்குகிறீர்கள்..." என்ற கேலி ராணியின் பார்வையில் தெரியும். ஆனால் வாணி இதை கண்டுகொள்ளமாட்டார். கதையும் விளையாட்டும் நடந்துகொண்டிருக்கும் கூடவே வாசிப்பும் எழுத்தும் எல்லாம் நடந்திருக்கும். அது குழந்தைகளுக்கே தெரியாது. அவ்வளவு இயல்பாக நடந்திருக்கும். கற்றல் செயல்பாடுகள் கதையோடும் விளையாட்டோடும் பின்னிப் பிணைந்திருக்கும்.
எ. பி. எல் என்ற முறையில் ஒரே வகுப்பில் பல்நிலைக் குழந்தைகளை வைத்துக் கற்பிக்கும்போது அவர்களே அவர்களின் கற்றல் பயணத்தை மதிப்பிடும் ஏணி தரப்பட்டிருக்கும். அதில் ராணியின் குழந்தைகள் ஊச்சியில் இருப்பார்கள். வாணியின் குழந்தைகள் பாதிதூரத்தைத்தான் கடந்திருப்பார்கள்.
ஆனால் அதே ராணி குழம்பிப் போகும் ஓர் இடம் இருக்கிறது. அது இரண்டு பேருடைய குழந்தைகளும் ஐந்தாம் வகுப்பிற்குச் செல்கிறார்கள். அங்கு வாணியின் குழந்தைகள் தாம் எப்போதும் முன்னணியில் இருப்பார்கள்.
அதைப் பார்த்து ராணிக்கு மயக்கமே வந்துவிடும். நான் இவ்வளவு சிரமமெடுத்து கற்பிக்கிறேன். ஆனால் ஒரு வருடமும் என் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பில் சிறப்பான இடத்தை அடைவதில்லையே என்று கவலைப்படுவார். இருந்தாலும் ராணிக்கு வாணியிடம் ஆலோசனை கேட்கவோ தன்னை மாற்றிக்கொள்ளவோ தோன்றவில்லை. எதுவோ ஒன்று அவரைத் தடுத்தது.
அடுத்த வருடமாவது தன் குழந்தைகள் சிறப்பான இடத்தை அடைந்து என் மானத்தைக் காப்பாற்றுவார்கள் என்று எப்போதும் காத்திருப்பார் ராணி.
இங்கு ராணியின் புரிதல் எங்கே தவறாகிறது?
கற்பிப்பது என்றால் பாடத்தைக் கற்பிப்பது, மதிப்பீடு செய்வது, குறையிருப்பின் பயிற்சியளிப்பது... என்ற வரிசையைப் பின்பற்றுவது என்று அவர் புரிந்து வைத்திருக்கிறார்.
பாடத்தை நடத்தி முடித்து கேட்கும் வினாக்களுக்கு விடை கூறிவிட்டால் குழந்தைகள் கற்றுக்கொண்டதாக அவர் நினைக்கிறார்.
சற்று கண்டிப்பும் தண்டனையும் தேவைதான். பயம் கற்றலை ஊக்குவிக்கும் என்பதை அவர் நம்புகிறார் என்பது அவருடைய செயல்களில் வெளிப்படுகிறது.
ராணிக்குப் புரியாமல் போனது என்ன?
கற்பிப்பதின் விளைவை மதிப்பிட நீண்ட காலம் தேவை.
கற்கிறோம் என்று தெரியாமல் கற்பதுதான் துவக்க வகுப்பில் சிறந்தது.
மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை கவலையோடு இருக்கும் குழந்தையைவிட, பயத்தோடு இருக்கும் குழந்தையைவிட விரைவாக, அதிகமாகக் கற்றுக்கொள்ளும்
போன்ற கருத்துகள் ராணிக்குத் தெரியவில்லை.
என் கருத்து
நீண்டகாலம் நிலைத்து நின்று பலன் தரும் தாவரங்கள் யாவும் நட்டவுடன் பூப்பதில்லை.
ஜி. ராஜேந்திரன்
14/05/2026
ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் எழுதிய நாட்குறிப்புகளை நம் குழுவிலும் முகநூலிலும் பகிர்ந்தது நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
கேரள மாநிலம் எங்கும் பல நூறு பள்ளிகளிலுள்ள குழந்தைகள் இந்த நாட்குறிப்பு எழுதும் மாதிரியைப் பின்பற்றி எழுதத் தொடங்கினர். அவர்களுள் அதிக எண்ணிக்கை நாட்குறிப்பு எழுதிய இரண்டு குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து பாராட்டு விழா நடத்தி "படைப்பாக்க ஆசிரியர் சங்கம்" பாராட்டியுள்ளது.
(இது நம் "ஆக்கவிய ஆசிரியர் சங்கம்" என்பது போலவே இருக்கிறது அல்லவா!)
அது போல அதிக கதைப்புத்தகங்கள் வாசித்த ஒன்றாம் வகுப்பிலுள்ள மூன்று குழந்தைகளையும் பாராட்டியுள்ளனர்.
புதுமையான முறையில் குழந்தைகளுக்கேற்ற கற்பித்தல் முறையைப் பின்பற்றிய ஆசிரியர் சஞ்சய் அவர்களும் இந்நிகழ்வில் பாராட்டுப் பெற்றுள்ளார்.
(நண்பர் திரு கலாதரன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...)
மீண்டும் நம் கவனத்தைப் பெறுவது ஒன்றுதான்.
ஒன்றாம் வகுப்பில் பெரிய பெரிய வாக்கியங்கள் கொண்ட நாட்குறிப்புகளைப் படத்தின் உதவியோடு எழுத வேண்டுமானால் அந்த வகுப்பு ஆசிரியர் என்னென்ன செய்திருப்பார்?
ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் பெரிய பெரிய கதைப்புத்தகங்கள் வாசித்திருக்க வேண்டுமானால் நிச்சயமாக அவர்கள் ஒவ்வோர் எழுத்து எழுத்தாக வாசித்திருக்க மாட்டார்கள் தானே... அப்படியானால் அந்த வகுப்பு ஆசிரியர் என்னென்ன செய்திருப்பார்?
வரும் கல்வியாண்டில் யாரேனும் அந்த வகுப்பு ஆசிரியர் செய்தவற்றுள் சிலவற்றை நம் ஒன்றாம் வகுப்பிலும் செய்து பார்க்கலாம் என்று விரும்பினால் உதவ ஆயத்தமாக இருக்கிறேன்.
பார்ப்போம்.
ஜி. ராஜேந்திரன்
15/04/2026
மதி மகிழ்ச்சி
சமீபத்தில் ஆர்ட்மிஸ் – 2 என்ற விண்கலத்தில் நிலவைச் சுற்றி வந்த நான்கு போருள் ஒருவர் கிறிஸ்டீன கோச். அவர் நிலவைப் பார்த்துவிட்டு, இல்லையில்லை அதன் அழகை அனுபவித்து விட்டுச் சொன்ன தொடர் Moon Joy – மதி மகிழ்ச்சி. (கட்டுரை கீழே)
இத்தகைய ஒரு புதிய தொடரை உருவாக்க வேண்டியதின் காரணம் என்னவாக இருக்கும்?
மொழியின் எல்லைகள் எவை?
கூடவே மிக முக்கியமாக ஆசிரியத்தின் எல்லைகள் எவை?
போன்ற கருத்துகளைப் பற்றிய கலந்துரையாடலுக்கு இத்தொடர் காரணமாக அமைந்துள்ளது.
நிலவு வானத்தில் ஒட்டி வைத்த ஒரு சுவரொட்டி அல்ல. உண்மையாகவே நிலவு இருக்கிறது. நான் அதைப் பார்த்தேன். பார்க்க முடியாத அதன் மறுபக்கத்தைப் பார்த்தேன். நான் ரசித்தேன். மகிழ்ந்தேன். இனி அதை அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும். எப்படி? அதுவும் அந்த அனுபவம் இதுவரை கிடைக்காத ஒருவருக்கு எப்படிச் சொல்வது?
எப்படிச் சொன்னாலும் அந்த உண்மைக்கு நிகராகாது. புது அனுபவம் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இதற்கும் ஆசிரியர்களாகிய நமக்கும் என்ன தொடர்பு? பார்ப்போம்.
ஆசிரியர் நிலவைப் பார்த்து விரலைக் காட்டலாம். குழந்தைகள் விரலை மட்டுமே பார்க்காமல் நிலவைப் பார்க்க வேண்டும். அப்படி நிலவைப் பார்த்தாலும் போதாது. நிலவுக்குப் போகவும் வேண்டும்.
ஆசிரியப் பயிற்சியிலும் இதேதான். சுட்டிக்காட்டத் தான் முடியும். நிலவுக்குப் பயணம் செய்ய வேண்டியது ஒவ்வோர் ஆசிரியருடையவும் கடமை. அந்தத் துணிச்சல் நமக்கு வேண்டும். எத்தனை கேட்டாலும் எத்தனை வாசித்தாலும் எதற்கு கண்ணால் கண்டாலும் நிஜ அனுபவத்திற்கு ஈடாகுமா என்ன?
ஆசிரியப் பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஒரு நிலவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது ஓர் ஆசிரியரின் நாட்குறிப்பு. மாவோரி பழங்குடியின மக்களுக்கு ஆசிரியராகச் சென்ற சில்வியா அவர்கள் அப்போது அமெரிக்காவில் அச்சிடப்பட்ட பல மழலைக் குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பயன்படுத்தித் தோற்றுப்போய், ஆசிரியர் தொழிலையே விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறார்.
அப்படி முடிவு செய்ததும் மனம் லேசாகிறது. பாரம் குறைகிறது. அவர். புத்தகங்களை ஒதுக்கிவிட்டு குழந்தைகளிடம் கேட்கிறார். "நான் உங்களுக்காக எழுதப்போகிறேன். நான் என்ன எழுத வேண்டும்?" என்று கேட்கிறார். Ghost, Hunger ஆகிய சொற்களைக் குழந்தைகள் சொல்கிறார்கள். அப்போதுதான் அவருக்கு அமெரிக்காவில் அச்சிடப்பட்ட புத்தங்கள் இக்குழந்தைகளிடமிருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்று.
அங்கிருந்து, அந்தக் கேள்வியிலிருந்து, குழந்தை மையம், ஆக்கவியம், வகுப்பறையில் அறிவு உற்பத்தித் தொடங்குகிறது. வகுப்பறையில் மாயங்கள் விரிகின்றன. தன் வகுப்பறையில் நடந்தவற்றை நாட்குறிப்பாக எழுதுகிறார் சில்வியா. அந்த நாட்குறிப்பு The teacher என்ற புத்தகமாக வெளிவந்தது. அதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். தன்னறம் நூல்வெளி அதை வெளியிட்டிருக்கிறது.
நீங்கள் இப்போது நிலவைப் பார்க்கலாம். நிலவுக்குப் ப.யணமும் போகலாம். அதாவது புத்தகத்தை வாங்கி வாசிப்பது பூமியிலிருந்து நிலைப் பார்ப்பது போல. அக்கருத்துகளை வகுப்பில் சற்று முயற்சியெடுத்து நடத்திப் பார்ப்பது நிலவுக்குப் பயணம் செய்வது போல. அப்படி நடத்திப் பார்க்கும்போது கிடைக்கும் உண்மையான அனுபவத்திற்கு ஈடு இணை கிடையாது.
என் அனுபவம்
எனக்கு
உன் அனுபவம்
உனக்கு
என் அனுபவம் உன் அனுபவம் ஆகாது.
உன் அனுபவம் என் அனுபவம் ஆகாது
அந்தப் புத்தகத்தை வாங்கக் கீழ்வரும் லிங்கைப் பயன்படுத்தலாம்.
ஓர் ஆசிரியர் – தன்னறம் நூல்வெளி https://share.google/GyXu73mB442GVfucp
Moon Joy
–Andrea Miller, editor, Lion’s Roar magazine
Earlier this week, when the astronauts of the NASA mission Artemis II, were conducting their landmark lunar flyby, they were filled with what one NASA officer called “moon joy.”
Although the astronauts had been well trained in the cold language of science, as they looked at the far side of the moon — the side that no human had ever before seen in real time — they slipped into the language of wonder.
“I just had an overwhelming sense of being moved by looking at the moon,” astronaut Christina Koch told The New York Times. “The moon really is its own unique body in the universe,” she continued. “It’s not just a poster in the sky that goes by — it’s a real place.”
Reading these words, I recalled a certain Buddhist teaching: If someone tries to tell you about the moon, he may — with his finger — point it out to you in the sky. But you should not confuse the finger for the moon. Instead, guided by the finger, you should look at the moon itself.
Here, the moon represents the direct experience of truth, the true nature of mind, enlightenment itself. In contrast, the finger represents the teachings, the methods, the words and concepts a teacher uses to invite you to awaken. What does this mean? No teacher or text can give you enlightenment; awakening can only be experienced directly. Words are a raft you can use to get to the other shore, but then let them go. Ultimately, there’s no way to explain direct experience.
I think the astronauts of Artemis II tasted this truth. Mission commander Reid Wiseman quipped that mission control should send him a new list of words to expand his vocabulary because he knew of no adjectives, no words, to describe what they were seeing out the window.
எங்கள் மின்னஞ்சல் குழுவில் இக்கட்டுரையைப் பகிர்ந்த திரு தாரா மோகன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
ஜி. ராஜேந்திரன்
ஓர் ஆசிரியர் – தன்னறம் நூல்வெளி நியூசிலாந்துப் பழங்குடிகளான மாவோரி இனச் சிறார்களின் கல்விக்காக ஆசிரியை சில்வியா ஆஷ்டன் வார்னர் சுமார் 24 ஆண்ட....
Category
Contact the school
Telephone
Website
Address
14/34, Selvalakshmi Garden, Subramaniyam Palayam G. N Mill Post
Coimbatore
641029
Alerts
Be the first to know and let us send you an email when Qrius Learning Initiatives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.