Today Ceylon
வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு
04/06/2026
#மரணத்தின் #விளிம்பிலிருந்து_2.5 #வயது #குழந்தையை #மீட்ட_10 #வயது #தேவதை!
அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தேவதையாக ஓடி வந்த சிறுமி; மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா.
அந்தச் சிறுமியின் துணிச்சலுக்குப் பின்னால் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு கண்களையும் கலங்க வைக்கும் ஒரு பெரிய கதை இருக்கிறது நண்பர்களே. கோதமங்கலம் கப்பூங்காச்சிறாவைச் சேர்ந்த பாத்திமா ஸைஹ்ரா என்ற அந்த 10 வயது சிறுமி,
உண்மையிலேயே அந்தக் குழந்தைக்காக கடவுளின் தூதராக வந்திருக்கிறாள். சம்பவம் நடந்தபோது அவள் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள்.
அவளுடன் இருந்த அத்தைதான் குளத்தில் இரண்டு கைகள் மட்டும் மேலே தெரிந்ததை திடீரென கவனித்தார். குளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பது ஒரு பிஞ்சுக் குழந்தை என்பதை உணர்ந்த உடனே, பாத்திமா ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அவளது மனதில் இருந்தது அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். சைக்கிளிலிருந்து குதித்தவள் நேராக குளத்திற்குள் பாய்ந்தாள்!
தண்ணீரில் மூழ்கியிருந்த அந்த இரண்டரை வயது குழந்தையை அவள் அணைத்தபடி மேலே தூக்கி வந்து கரைக்குக் கொண்டு வந்தாள். கரை சேர்ந்ததும் பதற்றப்படாமல் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் மெதுவாகத் தட்டி, வயிற்றுக்குள் சென்றிருந்த தண்ணீரை வெளியேற்ற முயன்ற அவளது சமயோசித புத்தி உண்மையிலேயே வியக்க வைக்கிறது. நான்கு வயதிலிருந்தே நீச்சல் கற்றிருந்ததால்தான் இந்தச் சிறிய வயதிலேயே அவளால் இத்தனை தைரியமாக குளத்திற்குள் குதிக்க முடிந்தது.
சற்று யோசித்துப் பாருங்கள்; ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தால்கூட அந்தக் குடும்பம் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்திருக்கும்! தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றொரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பாத்திமாவை எவ்வளவு பாராட்டினாலும் அது போதாது. நீதான் உண்மையான ஹீரோ; கேரளத்தின் பெருமை!
இறைவன் உன்னை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்...🤲
Vijith Kumar
04/06/2026
மாணவன் உட்பட மூவர் பலியான
நாவலப்பிட்டி விபத்து..
இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.
மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
04/06/2026
சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம்.
பாறுக் ஷிஹான்
எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன் இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
அம்பாறை மாவட்டம் மூன்று இனங்கள் வாழும் சமூகமாக இருக்கின்றோம்.இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இரு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றோம்.இலங்கை தமிழரசுக் கட்சியானது சிறுபான்மை இன விடுதலைக்காக நீண்ட காலம் பயணித்த ஒரு கட்சியாகும்.இதே வேளை கல்முனை பிரதேசம் சம்பந்தமாக இங்கு கூற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.கல்முனை பிரதேசம் என்பது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் மக்கள் சிறுபான்மையாகவும் வாழுகின்ற இடமாகும்.ஆனால் 1989 ஆண்டு முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் யாவரும் அறிவீர்கள்.இப்பிரதேச செயலகம் குறித்து எமது தமிழ் தேசிய தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.
இந்த முயற்சி எமக்கு கை கூடாத சூழ்நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி இருந்தோம்.அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக எமது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.இன்று இம்மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.அவரது அக்கருத்துக்களை பார்க்கின்றபோது இனவாதமாக கூறிவிட்டு அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.உண்மையில் நாங்கள் அதை மறுக்கின்றோம்.
நிச்சயமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.அவர்களும் ஒரு நிர்வாக கட்டமைப்பினுள் சகல உரிமைகளையும் சகல சலுகைகளையும் பெற்று வாழ வேண்டும் என விரும்புகின்றார்கள்.அண்மைக்காலத்தில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தற்போது நீதிமன்ற தீர்ப்பின் படி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த மக்களும் சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.அதே போன்று தான் இப்பிரதேச செயலகத்திற்கும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.அண்மைக்காலங்களில் இச்செயலகத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அத்துமீறல்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவீர்கள்.
சில அரசியல்வாதிகள் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களுக்காக நீதிமன்றத்தை நாங்கள் தற்போது நாடி இருக்கின்றோம்.அந்த நீதிமன்ற தீர்ப்பு கூட எவ்வாறு அமையப்போகின்றது என தெரியவில்லை.அதே போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பல கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததாக அறிகின்றோம்.அதன் அடிப்படையில் இவ்விடயத்தில் எமது நியாயபூர்வமான உரிமைகளை முன்வைத்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கங்களுடன் பேரம் பேசி சில விடயங்களை சாதித்திருக்கின்றார்கள்.நாங்கள் தொடர்ச்சியாக கொள்கையுடன் பயணித்ததன் காரணமாக எமது மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள்.
அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்காகவே நீதிமன்றத்தை நாங்கள் நாடி இருக்கின்றோம்.நாங்கள் நீதிமன்ற தீரப்பினை நம்பி இருக்கின்றோம்.அதன் அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம்.அத்துடன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.
04/06/2026
இன்றைய வானிலை
2026.06.04
தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகரித்த மழைவீழ்ச்சி காணப்படும்.
இதன் அடிப்படையில்
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். இதேவேளை நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
**************************
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஹம்பாந்தோட்டை ஊடாக ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
03/06/2026
#ஹொரண முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் மாயம், 50க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி!
ஹொரண, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணை - படகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ பரவலையடுத்து, ஆரம்பத்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது காணாமல் போனோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் சிக்கியிருந்த 44 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைப் பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
03/06/2026
றிஸ்வி யஹ்சர் உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையேற்றார்...!!!
(ஷனா)
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கடமைக்கு மேலதிகமாக உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராகவும் இன்று (03) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுப்பம மங்கள விக்ரமாராச்சி மற்றும் உகண பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். றிஸ்வி யஹ்சர், 2000 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் மகோயா பிரதேச செயலகம், மகோயா வலயக் கல்வி அலுவலகம், பதியத்தலாவ பிரதேச செயலகம், அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் இதற்கு முன்னர்
கணக்காளராக கடமையாற்றியுள்ளார். இறுதியாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமை ஆற்றும் நிலையிலயே தற்போது இப்பணிக்கு மேலதிகமாக உகன பிரதேச செயலகத்தில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
றிஸ்வி யஹ்சர், மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் - நஜ்முன்னிசா ஆகியோரின் இரண்டாவது புதல்வர் என்பதுடன் இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
03/06/2026
நாவிதன்வெளியில்
'உலக பால் தினம் 2026'
உலக பால் தினத்தை முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ் “திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நாவிதன்வெளி பிரதேச செயலக முன்றலில் நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் Dr. (Mrs). யாமினி மயூரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தம் புதிய திரவப் பாலின் பாவனையை ஊக்குவித்தல், பாலின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்தல் மற்றும் உள்ளூர் பால்பண்ணையாளர்களை ஊக்குவித்தல் என்பனவாகும்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் தொடரும் மாணவர்களுக்கும் பாலின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் குறித்து தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
03/06/2026
14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம்-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்
பாறுக் ஷிஹான்
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை(2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் 2 இளம் பிக்குகள் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று(3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
03/06/2026
ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது
கைது செய்ய சென்ற பொலிஸாரும் காயம்-சம்மாந்துறையில் சம்பவம்
பாறுக் ஷிஹான்-
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய 2 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸார் தமது உயிரை பணயம் வைத்து அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.குறித்த 36 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய சென்ற நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை தாக்க முற்பட்டதுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.பின்னர் நீண்ட தேடுதலின் மீண்டும் அச்சந்தேக நபர் கைதானார்.இதன்போது இச்சம்பவத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்திருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
மேலும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகத்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைதான குறித்த 2 சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கையானது மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
03/06/2026
#கிண்ணியாவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு...
கிண்ணியா, இடிமன் பிரதேசத்தில் நேற்று (02) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா, அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய எம். ஏ. உசன் என்ற கூலித் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்த நபர் (01) திகதி இரவு கிண்ணியா, ஈச்சந்தீவு பகுதிக்கு ஆற்று மணல் ஏற்றும் கூலித் தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சி.சி.டி.வி (CCTV) காட்சிப் பதிவுகளின்படி, குறித்த நபர் மணல் ஏற்றுவதற்காகப் பயன்படுத்திய சவல் , மோட்டார் சைக்கிளின் கைப்பிடிக்குள் (Handlebar) சிக்கியுள்ளது.
இதன்போது, குருநாகல் பகுதியில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லொறியின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியையும் அதன் சாரதியையும் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கிண்ணியா பிரதேச போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ. எம். முஸாமில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
294/A Ampara Road Irakkamam
Ampara
32450