Ceylon Times Network

Ceylon Times Network

Share

உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...

Photos from Ceylon Times Network's post 26/06/2026

ஐஸ், ஹெரோயினுக்கு முற்றுப்புள்ளி! கொழும்பை அதிரவைத்த ‘ரட்டம எக்கட’ பேரணி

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று (ஜூன் 26), கொழும்பில் ‘ரட்டம எக்கட’ (Ratama Ekata) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இளைஞர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியின் மூலம், ‘ஐஸ்’ (Crystal M**h), ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்குவோம் என்ற வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் ‘ரட்டம எக்கட’ தேசிய திட்டம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கிராம மட்டத்திலிருந்து சமூக பங்கேற்பை வலுப்படுத்தி, இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாகும்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கையின் மூலம் இதுவரை சுமார் 10 மெட்ரிக் டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. இதில் 2,100 கிலோ ‘ஐஸ்’, 1,950 கிலோ ஹெரோயின், 5,800 கிலோ கஞ்சா உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் அடங்குகின்றன.

Photos from Ceylon Times Network's post 26/06/2026

ஆசிரியர்களுக்கு நன்றிக்கடன் செலுத்திய பழைய மாணவர்கள் : சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வ கௌரவிப்பு விழா – ஒன்றுகூடலுக்கான சிறப்பு T-Shirt அறிமுகம்

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 1992/2005 பழைய மாணவர்கள், தங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுக்கும் முன்னாள் அதிபருக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்றிரவு உணர்வுபூர்வமாக சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய தொழிநுட்ப மண்டபத்தில் நடைபெற்றது.

1992 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், தங்களது ஆசிரியர்கள் மற்றும் அக்காலத்தில் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றிய எம்.ஐ. ஜப்பார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வை மேலும் அர்த்தமிக்கதாக்கும் வகையில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்காக இராப்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட தருணங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தன.

இதனுடன், பழைய மாணவர்களின் ஒன்றுகூடலின் அடையாளமாக வடிவமைக்கப்பட்டிருந்த சிறப்பு T-Shirt ஒன்றும் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பழைய மாணவர்களிடையேயான ஒற்றுமை, நட்பு மற்றும் பாடசாலையின் மீதான பற்றுறுதியை பிரதிபலிக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்களை மறவாமல் நன்றியுடன் கௌரவிக்கும் இம்முயற்சி, மாணவர்–ஆசிரியர் உறவின் உயரிய பண்பையும் கல்வியின் மனிதநேயப் பெறுமதிகளையும் வெளிப்படுத்தும் முன்னுதாரணமாகப் பலராலும் பாராட்டப்பட்டது.

“ஆசான்களை மதிக்கும் மாணவர்களை உருவாக்கிய கல்வி நிலையங்களில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயம் முன்னணியில் திகழ்கிறது. காலம் கடந்த பின்னரும் தங்களது ஆசிரியர்களுக்கு பழைய மாணவர்கள் வழங்கும் மரியாதையும் நன்றியுணர்வும் கல்வியின் உண்மையான வெற்றியை எடுத்துக்காட்டுகின்றது” என நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் தற்போதைய அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்சார், பிரதியதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

26/06/2026

ஞானசார தேரர் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு, ஜூலை 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் இருந்ததால், வழக்கு இன்று மற்றொரு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்-விசாரணைக்காக வழக்கை ஜூலை 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

26/06/2026

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த கட்டண திருத்தத்தின்படி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்ட பின்னரே, கட்டண உயர்வின் சதவீதம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

26/06/2026

தமிழீழத்தை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாவிட்டால் வடக்கும் கிழக்கும் அழியும் - பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் !

தமிழீழத்தை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளாவிட்டால் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் அழியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியமை முற்றிலும் சரியானது. அதனை நான் வரவேற்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்வரும் மாதங்களில் நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜிநாமா செய்தால், எனது ஆவனத்துக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவார். தயவு செய்து அந்தப் பெண்மணியை பாதுகாப்பான இடத்தில் அமரக்கூடியவாறு ஆசன நிரல் நிலையை இங்கே ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விடத்தில் ஒரு பெண்மணி இருக்கும் போது அதற்கு அடுத்ததாக பெண் பித்தர் இருந்தால் அந்த பெண்ணால் இருக்க முடியாது. இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கதிரைகளை மாற்றியமைக்க வேண்டும். கதிரைகளை மாற்றித் தருமாறு நான் பல தடவைகள் கடிதம் கொடுத்துள்ளோம். இதில் கவனம் செலுத்துமாறு கோருகின்றோம்.

இதேநேரம் வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அதனை நான் மிகவும் வரவேற்கின்றேன். தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும். தமிழரை கொலை செய்வது யார்? தமிழீழம் என்ற பெயரில் தமிழரை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் இனம் என்றாவது ஒருநாள் விளங்கிக்கொள்ளாவிட்டால் எமது வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் அழியும் என்பதனை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

சைக்கிள் கட்சியினரும், வீட்டு சின்னக் கட்சியினரும் எனது உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தார்கள். மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதால் நான் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். மக்களுக்காகவே நான் அரசியல் செய்கிறேன். உண்மையை பேசுவதால் நெருக்கடிக்குள்ளாக்குவதாயின் சாகும் வரை அரசியல் செய்வேன். எவன் எதிர்த்தாலும் அரசியல் செய்வேன் என்றார்.

26/06/2026

ஜனாதிபதியின் கவனம் கைது விவகாரங்களில் அல்ல ; மக்களின் வாழ்வாதாரத்தில் இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து மக்களுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, கைது, விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸ், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மற்றும் நீதிமன்றங்களை தாமே மேற்பார்வை செய்வது போன்று, பாராளுமன்றத்தில் கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து தெரிவிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

"வழக்குகள் இருந்தால் சட்டம் தனது வழியில் செல்லட்டும். எந்த விசாரணையையும், எந்த சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு தீர்வு காண்பதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தூய்மையான ஆட்சியை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசே தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகவும், அமைச்சர்கள் சிலர் பொறுப்புக்கூறாமல் செல்வம் குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதை விட, நாட்டின் பொருளாதார நெருக்கடி, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழல் குறித்த மக்களின் கவலைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

26/06/2026

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் தமிழ் மற்றும் தமிழ் மொழிக் கற்பித்தலில் சிறப்புப் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

(சித்தா)

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் வவுனியா கற்றல் நிலையத்தினால் தமிழ் மற்றும் தமிழ் மொழிக் கற்பித்தலில் சிறப்புப் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தகுதியாக பின்வரும் தேவைகள் காணப்படுகின்றன.

தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு க.பொ.த. உயர்தரத்தில் குறைந்தது 3 பாடங்களில் சித்தி அல்லது தமிழ் மொழியில் க.பொ.த. உயர்தரத்தில் 03 தேரச்சிகள் அத்துடன் க.பொ.த.சாதாரண தரத்தில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தில் பி தரத்தினைப் பெற்றிருத்தல் அல்லது தேசிய கல்வியற் கல்லூரியில் பெற்ற தேசிய கற்பித்தலில் டிப்ளோமா (தமிழ்) பூர்த்தி செய்திருத்தல் அல்லது செனற் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணையான அல்லது உயர்வான கல்வித் தகுதி என்பனவாகும்.

மேலும் விபரங்ளை அறிய 024 2222995 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது www.ou.ac.lk உடனான தொடர்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ளமுடியும்.
மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

26/06/2026

முதலைத் தாக்கி படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி!

மாது ஆற்றில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை – வத்துகெதர பகுதிக்குட்பட்ட மாது ஆற்றில் நேற்று (25) வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வத்துகெதர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நண்பருடன் இணைந்து படகில், மாது ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென வெளிப்பட்ட முதலையொன்று அவர்கள் பயணித்த படகை தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலால் படகு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

26/06/2026

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள் வாய் திறக்கவில்லை - சந்திரிக்கா

அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த தர்மத்தை சீரான வழியில் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள பௌத்தர்கள் அனைவரும் இணைந்து பகிரங்க கருத்தாடல்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியிருப்பதாவது:

எமது நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள் பலர் தற்போது வெகுவாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மனிதனின் நிலைத்திருப்பு என்பது அவர் நம்பும் கொள்கையிலேயே தங்கியிருக்கிறது என்பது போதிய தெளிவுள்ள சகலருக்கும் தெரியும். அந்தக் கொள்கை மத ரீதியானதாகவோ அல்லது அரசியல் ரீதியானதாகவோ அல்லது வேறு ஏதேனும் விடயங்களுடன் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம். எனவே அவ்வாறான கொள்கைகள் அல்லது அதனை அடிப்படையாகக்கொண்ட கட்டமைப்புக்கள் சீர்குலையும்போது, அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் உடைந்துபோகிறார்கள்.

இன்றளவிலே எமது நாட்டில் வாழும் பௌத்தர்க்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாட்டைப் பொறுத்தமட்டில், எமது நம்பிக்கையோ அல்லது கொள்கையோ அதனுடன் தொடர்புடைய தலைவர் ஊடாகவே முன்கொண்டுசெல்லப்படுகிறது. எனவே பௌத்த மதத்தைப் பொறுத்தமட்டில், அதற்குத் தலைமை வகிப்பவர்களாக நாம் மகா சங்கத்தினரையே கருதுகிறோம். இருப்பினும் அண்மையகாலங்களில் பெரும்பாலான பௌத்த பிக்குகள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக நாம் கேள்விப்பட்டோம். அதற்கும் அப்பால் நாம் பெரிதும் கௌரவமளிக்கும் அட்டமஸ்தானாதிபதி சிறுமியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அறிந்தோம். ஆனால் இதுகுறித்து எந்தவொரு அரசியல் தலைவரும் வாய் திறக்கவில்லை.

அரசியல் தலைவரோ அல்லது மதத்தலைவரோ, யாராக இருந்தாலும் தலைவர் என்பவர் மக்களுக்கு வழிகாட்டியாக செயற்படுபவர் ஆவார். இன்றைய இளைஞர்கள் முறையான வழிகாட்டல்களின்றி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர். இவை பற்றி அரசியல் தலைவர்கள் ஏன் பேசுவதில்லை? அவர்கள் தமக்குக் கிடைத்த வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை அவதானித்ததன் பின்னர், இதுகுறித்து நாட்டின் சிரேஷ்ட பிரஜை என்ற ரீதியிலும், இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையிலும் நான் பேசவேண்டும் என்று நினைத்தேன்.

அதற்கமைய இதுபற்றி நான் மகாசங்கத்தேரர்களுக்குக் கடிதமொன்றை எழுதினேன். குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தும் அதேவேளை, இவ்வாறான சம்பவங்களால் நாம் மதிப்பளிக்கும் பௌத்த தர்மம் சீர்குலைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதில் கேட்டுக்கொண்டேன். அத்தோடு நாட்டிலுள்ள பௌத்த சிவில் தலைவர்களை இணைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்றும் நான் ஆலோசனை வழங்கினேன். அதனை நான்கு மகாசங்கங்களின் தேரர்களும் ஏற்றுக்கொண்டார்கள். எனவே நாட்டிலுள்ள சகல பௌத்தர்களும் அரசாங்கத்தின் மீதோ அல்லது வேறு தரப்புக்கள் மீதோ பழிசுமத்திவிட்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காலம், இவ்விடயம் பற்றிய கருத்தாடல்களை உருவாக்கவேண்டும். நியாயமான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Photos from Ceylon Times Network's post 26/06/2026

சாவகச்சேரியில் கடையடைப்பு, கவனயீர்ப்பு போராட்டம்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழுமையான கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையொட்டி, சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து தூக்கி வீசிய குற்றச்சாட்டின் பேரில், உப தவிசாளர் ஞா. கிசோரின் பதவியும் உறுப்பினர் பதவியும் வடமாகாண ஆளுநரின் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Want your business to be the top-listed Media Company in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Kalmunai