Vasuki kumar

Vasuki kumar

Partager

தமிழில் கட்டுரைகள், செய்திகள் , கவிதைகள்…

Science, culture, humanity, Psychology,art, self thoughts and etc...

05/01/2026

வெளியே கண்டனம்; உள்ளே மௌனம்

– புலம்பெயர் சமூகங்களில் மறைக்கப்படும் உள்ளக வன்முறையின் ஆபத்தான எதிர்காலம்.

“வெளியே நடந்தால் கண்டனம்;
உள்ளே நடந்தால் மௌனம்.”

இது எமது சமூகத்தின் ஆழத்தில் உறைந்திருக்கும்
ஆபத்தான இரட்டை முகத்தின் சுருக்கம்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம்,எங்கள் பிள்ளைகள் பாடசாலைகளில்,பொது இடங்களில், விளையாட்டு மைதானங்களில்

(racism, discrimination) இனப் பாகுபாடு, வேற்றுமை என பல்வேறு சூழலை எதிர் கொள்ளும் போது- அது நியாயமற்ற செயல் என எதிர்க்கிறோம், சம உரிமை கேட்கிறோம், பதிவு செய்கிறோம்,
கண்டிக்கிறோம், போராடுகிறோம்.

அது தேவையானதும்,
நியாயமானதும் தான்.

ஆனால் அதே பிள்ளைகள்,
சொந்த இனத்தால் நடத்தப்படும்
மொழி, கலை, கலாசார பாடசாலைகளுக்குள் —

சீண்டல், பக்கச்சார்பு, ஒதுக்குதல்
(bullying, favoritism, exclusion)
போன்ற மறைமுக வன்முறைகளுக்கு
உள்ளாகும் போது —

“இதை வெளியில் பேசக்கூடாது”
“பிள்ளைக்கு பாதிப்பு வரும்”
“சமூகத்திற்கு அவமானம்”
என மௌனமாகிவிடுகிறோம்.

ஆனால் இந்த மௌனம் தான் —
எங்கள் பிள்ளைகளின் மனநலத்தை ஆழமாக காயப்படுத்தும்
மிக ஆபத்தான இடம்.

Bullying : தனிப்பட்ட பிரச்சனை அல்ல; அமைப்புசார் வன்முறை

Bullying என்பது
“சில பிள்ளைகள் துடுக்காக நடந்து கொள்கிறார்கள்; சிலரை விலக்கி வைக்கிறார்கள்; புறங்கதைக்கிறார்கள்; உருவக் கேலி செய்கிறார்கள்”
என்பவற்றையும் தாண்டி

உளவியல் ஆய்வுகள் bullying-ஐ
இவ்வாறு வரையறுக்கின்றன:

Repeated harm, power imbalance, and institutional silence.

அதாவது —
மீண்டும் மீண்டும் நிகழும் வன்முறை,
அதிகார சமநிலை இல்லாத சூழல்,
அதைத் தடுக்க தவறும் அல்லது மறுக்கும் அமைப்புகள்.

முக்கியமான உண்மை என்னவென்றால் —

👉 bullying பெரும்பாலும் ஒருவரால் தொடங்கப்படுகிறது
👉 பின்னர் இன்னும் சிலர் கூட்டுச் சேர்ந்து “பெரும்பான்மை” உருவாகிறது
👉 அந்த பெரும்பான்மை,
பக்கச்சார்பு கொண்ட அமைப்புகள், அதிகாரத்தை வைத்திருப்பவர்களால் மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.

ஒரு அமைப்பு, நிர்வாகம் மௌனமாக இருந்தாலே,
அது bullying-க்கு ஆதரவாக நிற்கிறது —

“இதுதான் உளவியல் ரீதியான தெளிவான உண்மை”.

Favoritism & Privilege : “தெரியாமலே” நடக்கும் அநியாயம்

சமூகவியல் ஆய்வுகள் (Pierre Bourdieu, Annette Lareau)
ஒரு முக்கிய உண்மையை சுட்டிக்காட்டுகின்றன.

சில பிள்ளைகள் —
• ஆசிரியருக்குப் பிடித்தவர்களாக இருப்பதாலோ
• பெற்றோர் சமூகத்தில் செல்வாக்குடையவர்களாக இருப்பதாலோ
• “நம்மவர்கள்” என்ற அடையாளத்தாலோ

முன்னுரிமையைப் (privilege)
பெற்றுக் கொள்கிறார்கள்.

அதன் விளைவுகள்:
• அவர்களுடைய தவறுகள் கவனிக்கப்படுவதில்லை, மறைக்கப்படுகின்றன
• அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன
• மேடைகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்
• மற்ற பிள்ளைகளின் உழைப்பும் திறமையும்
வெளித் தெரியாமல் (invisible) ஆக்கப்படுகின்றது.

இதன் மூலம், privileged பிள்ளைகள் தங்களை “மேன்மை உடையவர்கள்” என
நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

அதனால் தான், ஒரு கட்டத்தில் மேடைகள் பிறருக்குச் செல்லும் போது,
வெற்றிகள் மாறும் போது —

“என்னையேயா இப்படி நடத்தினீர்கள்?”
“எனக்கு எப்படி முன்னிலை இல்லாமல் போகும்”

என்ற அதிர்ச்சியான கோபமாக வெளிப்படுகிறது.

அது நியாயத்துக்கான குரல் அல்ல.
அது தன்னுடைய privilege குலைந்ததற்கான அலறல்.

இந்தக் குரல் இறுதியில், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமையுடன், அதற்கான காரணத்தை யார் மீதாவது “பழி”யாகப் போடும் நிலைக்கு கொண்டு சேர்க்கிறது.

புலம் பெயர் நாடுகளில் மொழி- கலை- கலாசார
பாடசாலைகள் உருவானது —
• அடையாளத்தை காக்க
• கலாசாரத்தை வளர்க்க
• பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்க என்ற பல நல்ல நோக்கங்களோடு.

ஆனால் நடைமுறையில் பல இடங்களில் —
• ஆசிரியருக்குப் பிடித்த பிள்ளைகளுக்கு மட்டுமே
கவனம், பயிற்சி, வாய்ப்புகள்
• “இந்தப் பிள்ளை தான் முன்னிலையில் வர வேண்டும்”
என்ற முன் தீர்மானங்கள்
• மற்ற பிள்ளைகளுக்கான பயிற்சிகள் திட்டமிட்டு குறைக்கப்படுதல்
• மேடைகளில் நிரந்தரமாக ஒரே முகங்கள்
• கேள்வி கேட்கும் பிள்ளைகள்
“நன்னடத்தை (discipline) இல்லாதவர்கள்”,
“ பிரச்சனக்குரிய பிள்ளைகள் (problem children) என முத்திரையிடப்படுதல் போன்ற திட்டமிட்ட பெயரிடல்கள் (systematic bullying)

ஆனால் இதைப் பற்றி நாம் racism போல பேசுவதில்லை. பேச விடுவதுமில்லை.

In-group bias : நம்முள் நடக்கும் அநியாயம் ஏன் மறைக்கப்படுகிறது?

உளவியல் இதற்கும் ஒரு பெயர் தருகிறது:

In-group bias

வெளியில் இருந்து வரும் அநியாயத்தை —
→ “அடையாள அரசியல்” என உணர்கிறோம்.

நம்முள் நடக்கும் அநியாயத்தை —
→ “பேசக்கூடாது”,
→ “மறைக்க வேண்டும்”
என்று நினைக்கிறோம்.

இதன் விளைவு என்ன?

racism-க்கு எதிராக போராடும் ஒரு பிள்ளை,
அதே நேரத்தில்,
தன் மொழிச் சூழலிலேயே,
தன் கலாசார வட்டத்திலேயே
மனரீதியாக சிதைக்கப்படுகிறது.

Bullying-ன் உளவியல் விளைவுகள் : ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

bullying-க்கு உள்ளான பிள்ளைகள் —
• தன்னம்பிக்கை இழக்கிறார்கள்
• தங்கள் சொந்த சமூகத்தின் மீது
பயம், விரக்தி, நம்பிக்கையீனம் அடைகிறார்கள்
• படைப்புத் துறைகளிலிருந்து
(creative fields) விலகுகிறார்கள்
• அடையாள முரண்பாட்டுக்கு
(identity conflict) உள்ளாகிறார்கள்

புலம்பெயர் பிள்ளைகளுக்கு இது இன்னும் கொடூரம்.

ஏனெனில் —
• வெளியில் பாகுபாடு (racism)
• உள்ளே நிராகரிப்பு rejection.

இது இரட்டை வன்முறை (double victimization).

அங்கீகரிக்கப்பட்ட, அதிகார பின்புலமுள்ள, அகங்கார
privileged குரல்கள் அழும்போது —

அவை தீவிரமாக பரவுகின்றன (viral).

ஆனால் அநியாயம் இழைக்கப்பட்டு,
அழவிடப்பட்டு,
அப்படியே கைவிடப்பட்ட பிள்ளைகளின் கதைகள் —

பேசப்படுவதில்லை.
பதிவு செய்யப்படுவதில்லை.
நினைவில் வைக்கப்படுவதில்லை.

இது ஒரு சுழற்சி.

இந்த சுழற்சியை உடைக்க வேண்டுமெனில்

உண்மையான மாற்றம் தொடங்க வேண்டுமென்றால் —
• racism போலவே
உள்ளக bullying-யையும்
பொது விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும்
• மொழி–கலை–கலாசார பாடசாலைகள் பொறுப்புக்கூறும் அமைப்புகளைக்
(accountability structures) கொண்டிருக்க வேண்டும்
• ஆசிரியர்தன்மை, அதிகாரம், privilege
ஆகியவை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்
• privileged குரல்களுக்கு மட்டுமல்ல; பாதுகாப்பில்லாத பிள்ளைகளின் பட்டனுபவ குரல்களுக்கும் பயமின்றி பேச இடம் தர வேண்டும்.

இறுதியாக

பிள்ளைகளுக்கு
மொழி கற்றுக்கொடுக்கலாம்.
கலாசாரம் சொல்லிக்கொடுக்கலாம்.

ஆனால்
நியாயம், சமநிலை, சுய மரியாதை இல்லாமல் எந்த கலாசாரமும் உயிரோடிருக்காது.

Racism-க்கு எதிராக பேசும் துணிச்சல்,நம்முள் நடக்கும் நேர்மையற்ற விடயங்களையும் எதிர்கொள்ளும் தைரியமாக மாறாதவரை —
“இந்த சமூகம் எனது” என்னும் நம்பிக்கையை பிள்ளைகளுக்கு வழங்காதவரை-
சேவையை அதிகாரமாக கையாளும் மனப்பாங்கு தொடரும் வரை-

விலகிச் செல்லும் எம் சந்ததிகளின் வீதம் அதிகரித்தே செல்லும் …..!

வாசுகி குமாரதாசன்
05/01/2026

18/12/2025

**தடையும் இல்லை…
தாங்குதலும் இல்லை — உறவுகள்**

ஒருவனுக்கு வழங்கப்படும் “பொறுப்பு” என்பது,
ஒரு பதவி அல்ல,
அது அவன் மேல் வைக்கப்படும்
ஒரு சமூக நம்பிக்கை.

அவன் கடமையாற்ற வேண்டிய,
அல்லது சேவையாற்ற வேண்டிய அந்த இடம்
எளிதானதாக இருக்காது.

அது
கேள்விகளால் நிரம்பியிருக்கலாம்..

பிழை பிடித்தல்களால் சூழப்பட்டிருக்கலாம்.

பல சமயம்,
தகுதி இருப்பினும்
அதை மீண்டும் மீண்டும்
நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கலாம்.

இத்தகைய சூழலில்,
ஒரு மனிதன்
வெறும் அறிவால் மட்டும்
நின்று பிடித்துவிட முடியாது.

அவனுக்குத் தேவை —
மன தைரியம்.
பக்க பலம்.
“நீ தனியாக இல்லை”
என்று சொல்லும்
ஒரு உறுதியான நம்பிக்கை.

பல உறவுகள்,
இந்தப் பொறுப்புகளை
எடுப்பவர்களைத் தடுப்பதில்லை.

“நீ விரும்பினால் ஏற்றுக்கொள்; நான் தடுக்கவில்லை என்று சொல்லுகின்றன..

ஆனால், அதோடு சேர்ந்துசொல்ல வேண்டியமிக முக்கியமான ஒரு வரி அங்கே இல்லாமலே போய்விடுகிறது.
அது —

“எது வந்தாலும் அதை கையாள உன்னால் முடியும். அதையும் மீறி நீ சோர்ந்தால், நான் உன் பக்கத்தில், உனக்காக இருக்கிறேன்.”

இந்த வரி இல்லாத இடத்தில், அனுமதி என்பது வெறும் போலியான சுதந்திரம்.

தலைமை அல்லது பொறுப்பு நிலைகளில் இருக்கும் மனிதன்
வெளியில் வலிமையானவனாகத் தோன்றலாம்.

ஆனால் உள்ளே,
அவன் தினமும் எதிர்கொள்ள வேண்டிய விடயங்கள் பல..

• தொடர்ச்சியான கேள்விகள்
• குற்றம் சாட்டல்கள்
• சிறிய தவறுகளையும் பெரிதாக்கும் பார்வைகள்
• “நீ இதற்குத் தகுதியா?”
என்ற சந்தேகங்கள்

இவற்றை எல்லாம் தனியாகவே கையாள வேண்டிய நிலை,
அவனைச் சோர்வடையச் செய்கிறது.

அந்தச் சோர்வு மனச்சோர்வாக மாறி,
அவனைப் பலவீனமானவனாக்குகிறது.

இது பற்றிய சிந்தனைகளே, பொறுப்புகளை ஏற்பதில் இருந்து மனிதனைத் தூரமாக ஓட வைக்கிறது.

இதுவுமல்லாமல்

1. உறவுகளில் விரிசல்
“நான் தடுக்கப்படுகிறேன்”
என்ற உணர்வு, சத்தமில்லாமல்
தூரத்தை உருவாக்குகிறது.

2. மனச்சோர்வு
வெளியில் பொறுப்பு, உள்ளே தனிமை —
இரண்டும் சேரும்போது மனிதன் உடைந்து போகிறான்.

3. தகுதியை வெளிப்படுத்த முடியாத நிலை
ஆதரவு இல்லாத சூழலில்
திறமை கூட, பயமாக மாறுகிறது.

4. பின்னடித்தல் (Self-withdrawal)
“இதற்கெல்லாம் நான் வேண்டாமே”
என்ற எண்ணம், சமூகத்திலிருந்து மட்டுமல்ல, தன்னிலிருந்தே மனிதனை விலக்குகிறது.

இவற்றைத் தவிர்க்க, உறவுகள்
பொறுப்புகளை எடுக்க
ஊக்குவிப்பது மட்டுமல்ல, அந்தப் பொறுப்புடன் வரும் மன அழுத்தத்தையும்
பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

“நீ சரியாக நடப்பாய்”
“எல்லாம் நன்றாக நடக்கும்”
“உன்னால் கையாள முடியும்”

இந்த வார்த்தைகள்
ஒரு மனிதனில் புதிதாக எந்த ஒரு திறமையையும் உருவாக்கிவிடப் போவதில்லை; ஆனால், அதை வெளிக்கொணர்வதற்குரிய தைரியத்தை, உந்து சக்தியைத் தருகின்றன.

தடை செய்யாமல் இருப்பது என்பது சுதந்திரமளிப்பது இல்லை;
பக்க பலம் இல்லாமல்
அவனை அந்தப் பாதையில்
தனியாக விட்டுவிடுவது —என்பது உண்மையில் அலட்சியமும்
பொறுப்பின்மையுமே ஆகும்.

மனிதனின் முயற்சிகளுக்கும்,
கடமைகளுக்கும் மிகப் பெரிய பின்னடைவு என்பது தோல்வி அல்ல.

தனித்து விடப்படுவதே.

தடுப்பதற்குத் தைரியமும்,
தாங்குவதற்குப் பொறுப்புணர்வும்
இல்லாத உறவுகள்
மனிதனை மெல்ல மெல்லச் சிதைக்கன்றன.

வாசுகி குமாரதாசன்
18/12/2025

11/12/2025

✍️ “ரேடியம் பெண்கள்”

1. அறிமுகம்

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகிற்கு புதிய அத்தியாயங்களைத் திறந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று — ரேடியம் (Radium).

1898 இல் பிரான்சைச் சேர்ந்த Pierre மற்றும் Marie Curie தம்பதிகள் இதனை கண்டுபிடித்தனர். அதன் ஒளிரும் தன்மையும் (luminescence) கதிர் வீச்சும் வியாபார உலகைச் சுண்டியிழுத்தது; ரேடியம் பெரும் வணிகப் பொருளானது.

விமான பாகங்கள், ஆயுத உற்பத்தி, மற்றும் கடிகார உற்பத்தியில் பரவலாக இது பயன்படுத்தப்பட்டது.
அதுமட்டுமன்றி, பற்பசை, முகப் பூச்சுகள், ஆரோக்கிய பானங்கள், ஸ்பா சிகிச்சைகள் போன்ற வியாபார வடிவங்களிலும் அது சந்தையில் இடம்பிடித்தது.


2. ரேடியம் தொழிற்சாலைகள்

முதலாம் உலகப் போரின் பின்னர், ஐரோப்பாவை முழுதும் சார்ந்திருக்க கூடாது என்ற உணர்வில் இருந்த அமெரிக்காவுக்கு, Colorado மலைப்பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட, ரேடியம் உள்ள கார்னோடைட் தாதுக்கள் (Carnotite ore) சுய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.

அமெரிக்காவில் United States Radium Corporation, Radium Dial Company போன்ற தொழிற்சாலைகள் தொடங்கின. அரசாங்கத்தின் பெரும் ஆதரவும் இந்த நிறுவனங்களுக்கு இருந்தது.

இந்த நிறுவனங்களுக்களால் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, பெரும்பாலும் இளம் பெண்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களின் பணி — ரேடியம் கலந்த ஒளிரும் நிறப்பூச்சை (luminous paint) பயன்படுத்தி கடிகார எண்களை வரைவது.

இதற்கு, பயன்படுத்தப்படும் தூரிகையின்(painting brush) முனை கூர்மையாய் இருக்க வேண்டும். அதற்கமைய, நிறுவனம் Lip, Dip, Paint என்ற முறையை கட்டாயப்படுத்தியது. இதன்படி, தொழிலாளர்கள் தூரிகையை நாவால் நனைத்து கூர்மையாக்கி எண்களை எழுதினர். இது ரேடியம் நேரடியாக உடலுக்குள் செல்லக் காரணமானது.

அந்தச் சாயம் அவர்களின் பற்கள், நகங்கள், ஆடைகள், முடி அனைத்தையும் பளபளப்பாக ஒளிரச் செய்தது. இது அவர்களுக்கு பெருமையாகத் தோன்றியது. இருட்டிலும் மின்னும் அழகிகளாய் மகிழ்ந்தனர்.

3. உடல் சிதைவுகள்

சில ஆண்டுகள் கழித்து அந்த ஒளிரும் அழகு குரூரமாக மாறத் தொடங்கியது.
• பற்கள் உதிர்ந்தன
• தாடை எலும்புகள் சிதைந்தன.
• உடல் எலும்புகள் உடைந்தன
• பெண்கள் கடும் வேதனையோடு சாவைச் சந்தித்தனர்

மருத்துவர்களால் ஆரம்பத்தில் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இவர்களின் நோய்களுக்கும் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனக் கூறுமாறு மருத்துவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டன.

ஆனால் நியூ ஜெர்ஸி மாநில மருத்துவ பரிசோதகர் Dr. Harrison Martland நடத்திய விசாரணையில், பெண்களின் எலும்புகள் கதிர்வீச்சை உமிழ்வதை கண்டுபிடித்து, நோய்களுக்கு ரேடியம் தான் காரணம் என்பதைத் தெரிவித்தார்.

அதைப் பொருட்படுத்தாமல், நிறுவனங்கள் “ரேடியம் தீங்கில்லாதது” என பொய்ப் பிரசாரம் செய்தன.அந்தப் பெண்களுக்கு வந்திருப்பது syphilis என்னும் பாலியல் நோயே என்று கூறின.

இவ்வாறே சில ஆண்டுகள் ஓடின.

4. போராட்டத்தின் தொடக்கம்

இறுதியில், 1927-இல் Grace Fryer என்ற பெண் வழக்குத் தொடரத் துணிந்தார். அவரோடு Catherine Donohue, Edna Hussman, Albina Larice, Quinta McDonald ஆகியோர் இணைந்தனர்.இவர்கள் பின்னாளில் Radium Girls என அடைமொழியால் அழைக்கப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளின் போது அவர்கள் சக்கர நாற்காலியிலும், சிதைந்த உடல்களோடும், பேசவே சிரமப்பட்டபடி நின்ற காட்சி பத்திரிகைகளால் “இது மரணமே சாட்சி சொல்ல வந்தது” என்று விவரிக்கப்பட்டது.

“எங்களின் வாழ்வை மீட்க முடியாது. ஆனால் புதிதாக இணையும் தொழிலாளர்களின் உயிரையாவது காப்பாற்றுங்கள்.” — என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

பெண்களின் சிதைந்த உடல்கள், மருத்துவ சான்றுகள், Dr. Martland-ன் அறிக்கை— இவை அனைத்தும் உண்மையை மறைக்க முடியாத நிலையை உருவாக்கின.

இறுதியில், 1928ல், நீதிமன்றம் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. நிறுவனம் நஷ்டஈடு வழங்க கட்டாயப்படுத்தப்பட்டது.

இது அமெரிக்க தொழிலாளர் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆனது:
• தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் கட்டாயமாக்கப்பட்டன
• மருத்துவ பரிசோதனைகள், கதிர்வீச்சு பாதுகாப்பு சட்டபூர்வமானது
• பாதுகாப்பு உபகரணங்கள், காற்றோட்ட வசதிகள் கட்டாயமானது
• 1949ல் ரேடியம் பெண்களின் வழக்கு அமெரிக்க சட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது

5. உலகளாவிய தாக்கம்

ரேடியம் பெண்களின் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது:
• சர்வதேச தொழிலாளர் அமைப்புகள் (ILO) வரை அதன் தாக்கம் இருந்தது.
• தொழில்சார் நோய்கள் (Occupational Diseases) பற்றிய சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன
• கதிர்வீச்சு பாதுகாப்பு - அறிவியல் நெறிமுறையாகவும், மனித உரிமையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• 1970ல் உருவான OSHA (Occupational Safety and Health Administration) சட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது

ஆனால், தீர்ப்பு வெளிவந்து சில ஆண்டுகளிலேயே Grace Fryer உட்பட பல பெண்கள் உயிர் இழந்து போனார்கள்.

6. பின்னர் நடந்தது

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் Radium Dial Company Illinois மாநிலத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.
• Catherine Donohue உட்பட பலர் அங்கு உயிரிழந்தனர்
• 1938ல் Donohue மரணத்திற்குப் பிறகும் நிறுவனம் பெயர் மாற்றி Luminous Processes, Inc. என்ற பெயரில் செயல்பட்டது

1949 வழக்கு
• Illinois Industrial Commission முன் தொழிலாளர் குடும்பங்கள் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்
• மருத்துவ சான்றுகள், முன்னர் நடந்த USRC வழக்கு (1928), Dr. Martland மற்றும் பிற மருத்துவர்களின் ஆய்வுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

தீர்ப்பு
• 1949ல், Illinois நீதிமன்றம் Radium Dial Company (மற்றும் அதன் வாரிசு நிறுவனங்கள்) தொழிலாளர்களின் மரணத்திற்குப் பொறுப்பு என்று தீர்மானித்தது
• பல குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டது
• கதிர்வீச்சு பாதுகாப்பு மீறல்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது

தாக்கம்
• 1949 தீர்ப்பு “Occupational Diseases” என்ற கருத்தை Illinois மாநிலத்தில் சட்டபூர்வமாக இணைத்தது
• இது அமெரிக்க தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது
• Radium Dial Company இறுதியில் மூடப்பட்டது
⸻———————————————

இன்று, மிக மிக சிறியளவிலான இராணுவ கடிகாரங்கள் தவிர, கடிகார உற்பத்தியில் ரேடியம் பயன்பாடு நிறுத்தப்பட்டு விட்டது.

ரேடிய கதிர் வீச்சை விட குறைந்த Tritium-3 அடங்கிய GTLS முறை கடிகார ஒளிர்விற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதை விட Super-Lumi Nova எனப்படும் வெளிச்சத்தை உறிஞ்சி, இருளில் ஒளி தரும் கடிகாரங்கள் பாதுகாப்பாகவும் பயன்பாட்டிலும் உள்ளது.

நான் இங்கு எழுதியவை, உண்மையான ரேடியம் தாக்கத்தின் ஒரு வீதம் மட்டுமே. ரேடியப் பயன்பாட்டால் உருக்குலைந்து, விகாரமாகி, சாவடைந்தவர்களின் படங்கள் முதற் கொண்டு பல தகவல்களை இணையங்களில் தாராளமாகப் பெறலாம். ஆனால் நான் தரப்போவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள், சக மனிதனை அழித்தாவது, இலாபம் ஈட்டுவதை விடுத்து, வாழ்வியல் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்பதை விதைப்பதற்காகவே எனது பதிவு.

வாசுகி குமாரதாசன்
22/08/2025

02/12/2025

பாரிஸ், டிசெம்பர் 2

ஐரோப்பா போரை விரும்பினால் - போரை ஆரம்பித்தால் - ரஷ்யா அதற்குத் தயாராக இருக்கிறது - என்று அதிபர் விளாடிமிர் புடின் இன்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனின் கூட்டணியான ஐரோப்பிய நாடுகள் போரின் பக்கம் நிற்கின்றன. ஐரோப்பாவுடன் போரிடுவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால் ஐரோப்பா ஒர் ஆயுத மோதலை விரும்பினால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம் - என்று அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் போரை நிறுத்துகின்ற அமைதித் திட்டம் ஒன்றின் உத்தேச வரைவை தொடர்ந்து விவாதித்து வருகின்ற பின்னணியில் அதிபர் புடினின் இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே சமரச முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்ற அமெரிக்க அதிபரது சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப்(Steve Witkoff) அதிபர் புடினைச் சந்திப்பதற்காக மொஸ்கோ வந்திருக்கிறார். அமெரிக்க அமைதித் திட்டத்தின் உத்தேச வரைவுத் குறித்து அவர் அங்கு பேச்சு நடத்தவுள்ளார்.

அந்தச் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னராக
செய்தியாளர் மாநாடு ஒன்றில் பேசிய புடின், "ஐரோப்பிய சக்திகள் உக்ரைனுக்கு ஆதரவான ஒரு சமாதான உடன்படிக்கைத் திட்டத்தை முன்வைக்குமாறு கோரி வருகின்றன. மொஸ்கோ இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருதுகிறது." - என்று தெரிவித்தார்.

இதேவேளை, உக்ரைனுக்கு உதவுகின்ற நாடுகளது கப்பல்கள் மீது ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யக் கொடியுடன் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று துருக்கி அருகே வைத்துக்

கடல் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகி எரிந்தது சேதமடைந்தது . இத்தாக்குதலை உக்ரைனே நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதனை ஒரு "கடற்கொள்ளை" என்று குறிப்பிட்ட புடின், உக்ரைனுக்கு உதவும் நாடுகளது கப்பல்களை ரஷ்யா இலக்கு வைக்கும் என்று மறைமுகமாக எச்சரித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடன் நேரடியாகத் தொடர்பு வைத்து முன்னெடுக்கின்ற சமாதான முயற்சிகளை முக்கிய ஐரோப்பிய நாடுகள் சந்தேகத்துடனும் முன்னெச்சரிக்கையுடனுமே அணுகிவருகின்றன. போரை நிரந்தரமாக நிறுத்துகின்ற எண்ணம் உண்மையில் ரஷ்யாவுக்கு இல்லை. அடுத்த கட்டத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்துவதற்குத் தேவையான இடைவெளிகளையே அது சமாதான முயற்சிகள் என்று கூறிவருகிறது.

-இவ்வாறு உக்ரைனை ஆதரித்துவருகின்ற ஐரோப்பியத் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.

தாஸ்நியூஸ் - பாரிஸ்
2-12-2025

30/11/2025

பாரிஸ், டிசெம்பர் 1

இயற்கை அனர்த்தத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப் படையின் பெல் 212 ரகக் ஹெலிக்கொப்ரர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

லுணுவில(Lunuwila) என்ற இடத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மாரவில (Marawila) ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய அவர் விமானப்படையின் விங் கொமாண்டர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாடெங்கும் புயல் மழை தணிந்துள்ள நிலையில் அனர்த்தங்களில் சிக்கியோர் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கா நேற்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார்.

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.தற்போதைய பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்கவும், விரைவான மற்றும் திறமையான மீட்புப் பணிகளைச் செயற்படுத்தவும் தேவையான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் ஏற்பாடுகளை வழங்குவதற்காகவே நாடெங்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அவசரகால நிலை எந்தவொரு அடக்குமுறை நடவடிக்கைக்கும் அல்லாமல், பேரிடர் மேலாண்மை மற்றும் நாட்டைத் திறம்பட மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் அவர் உறுதியளித்தார்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, சிறிலங்கா ஆகிய நாடுகளை ஒரேசமயத்தில் தாக்கிய புயல் மழை வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை சுமாராக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்னமும் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள
இழப்புகளும் சேதங்களும் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் உருவான சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்பு ஏற்பட்டிருக்கின்ற பேரழிவு என்று குறிப்பிடப்படுகிறது.

சிறிலங்காவில்
இதுவரை 334 பேர் உயிரிழந்திருப்பதாகக் கொழும்பில் உள்ள பேரிடர் முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

புயல் மழையால் பேரழிவைச் சந்தித்துள்ள இந்தோனேசியாவில் 442
மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 402 பேர் காணாமற்போயுள்ளனர். சுமாத்திரா தீவில் உள்ள இரண்டு நகரங்களே மிக மோசமான அழிவுகளைச் சந்தித்துள்ளன. நாட்டின் இதர பகுதிகளுடன் தொடர்பு துண்டித்த நிலையில் உள்ளன.

தாஸ்நியூஸ் - பாரிஸ்
01-12-2025

29/11/2025

பாரிஸ், நவம்பர் 29

செயற்கை நுண்ணறிவுக் கருவித் தளங்களில் உருவாக்கப்படும் செய்திகள், செய்திப் படங்கள் என்பன உலக அளவில் மக்களை ஏமாற்றிப் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.
முன்னெப்போதும் இருந்திராவாறு செய்தி உலகம் அதன் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.

தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்திருக்கும் மழைவெள்ள அனர்த்தக் காட்சிகள் சமூக ஊடகங்களை நிறைத்து வருகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலிப்படங்கள், வீடியோக்கள்.

அவை பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்புப் பணியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதால் அவை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர்.

தனிநபர்களால் சற்ஜிபிரி போன்ற ஆட்டிபிஷல் இன்ரெலிஜென் தளங்களில்
உருவாக்கப்படுகின்ற காட்சிகள் (AI-generated images) அவை போலியானவை என்பது உறுதியாகும் முன்னரே சமூக இணையத்தில் வைரலாகிவிடுகின்றன. மில்லியன் கணக்கான "விருப்பங்களை" (Likes) அள்ளிவிடுகின்றன.

தாய்லாந்து வெள்ளத்தின் போது பூனைக் குட்டி ஒன்றை நாய் மீட்டுக் காப்பாற்றுவதுபோன்று வெளியாகி உலகளவில் கவனத்தை ஈர்த்த ஒரு வீடியோ செயற்கை நுண்ணறிவுக் காட்சி என்பதை நிபுணர்கள் தற்போது உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
தாய்லாந்தின் தென் பகுதியில் பதிவான இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகியது. 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் மட்டும் இரண்டு மில்லியன் பார்வைகளை வென்றது.சர்வதேச செய்தி ஊடகங்கள் சிலவற்றிலும் அது இடம்பிடித்திருந்தது. ஆனால் அது போலியான வீடியோவாக இருப்பதற்கான ஆதாரங்களை லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

மனிதர்களைப் போலவே விலங்குகளும் இடர்களின் போது தமது சக விலங்குகளைக் காப்பாற்றும் குணத்தை இயல்பாகவே கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் செயல்களை
இழிவுபடுத்தும் விதமான இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட போலிக் காட்சி உருவாக்கத்தைச் சமூக ஊடக ஆர்வலர்கள் தவிர்க்க வேண்டும் என்று விலங்குகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டு இயக்கங்கள் கோரியுள்ளன.

அதேபோன்று தெற்குத் தாய்லாந்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றில் வெள்ள நிவாரண மீட்புப் பணியாளர்கள் போர் உடைகளில் தானியங்கி ஆயுதங்களோடு பணியில் ஈடுபடுவதுபோன்று காட்டும் மாற்றியமைக்கப்பட்ட (AI-modified) படத்தை வெளியிட்டதற்காகத் தாய்லாந்து எல்லைக் காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.

இதேபோன்று சிறிலங்காவை தாக்கிச் சீரழித்துள்ள தற்போதைய வெள்ளத்தின் போதும் ஏராளமான செயற்கை நுண்ணறிவுப் படங்கள் வெளியாகி வருகின்றன.
அவற்றின் உண்மைத் தன்மை குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

தற்போதைய அனர்த்த சூழ்நிலையில் பிரதான செய்திநிறுவனங்கள் இவைபோன்ற
செய்திகளையும் படங்களையும் உறுதிப்படுத்துவதற்காகத் திண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாஸ்நியூஸ் - பாரிஸ்
29-11-202

Vous voulez que votre personnage public soit Personnage Public la plus cotée à Paris ?
Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Adresse

Paris
75000