Kathi Selvakumar

Kathi Selvakumar

Share

1997 - மனோரஞ்சிதம் cd
1998 - மனோரஞ்சிதம் video
2001 -

05/16/2023

- தனக்கே உரிமை பூண்டமை. ---

"பாலகுமாரன் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?"
இது நேர்காணல் ஒன்றில் பாரதி பாஸ்கர் பாலாவைக் கேட்ட இறுதிக் கேள்வி.
"எல்லாருக்கும் இருக்கிறதுதான். நான் இறந்தபிறகு கொஞ்ச நாள் நினைக்கப்பட வேணுங்கறது ஒரு நியாயமான ஆசை. நீண்ட நெடுங்காலம் என்பது விதியினுடைய எழுத்து. அட! எவனோ ஒருத்தன் சரியா சொல்லிட்டு, எழுதிட்டுப் போயிருக்கான்யா! எவனோ ஒருத்தன் நல்லா வாழ்ந்திட்டுப் போயிருக்கான்யா! அவன் வாழ்ந்ததும் சரி, எழுதினதும் சரி, எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமில்லாத மனிதன்!, அப்படீன்னு சொன்னாப் போதும்". இது பாலாவின் பதில்.

பாலாவுடனான அனைத்து நேர்காணலிலும், மிகச் சிறப்பான நேர்காணல் பாரதி பாஸ்கர் - பாலா இடையேயானது என்பேன். இந்த நேர்காணலை ஓரிரு தடவைக்கு மேலாகப் பார்த்ததுண்டு. சிங்கம் போன்ற நிமிர்வு, நிறைந்த உற்சாகத்துடன் இருந்த பாலாவும், இலக்கிய ஆளுமையும் முதிர்ந்த பேச்சுத் திறனுமுள்ள பாரதி பாஸ்கரும் நடத்திய உரையாடல் எதிரும் புதிரும் நிலம் தொடாத பந்து வீச்சாக இருந்தது.

பின்னாளில், பாலகுமாரன் நினைவுப்பரிசு நிகழ்வில் கூட பாரதி பாஸ்கரின் மேடைப் பேச்சு இந்த நேர்காணல் அனுபவம் பற்றியே பெரும்பாலும் அமைந்திருந்தது.

'பொன்னியின் செல்வன் - 1' திரைப்பட வெளியீட்டுக்கு முன்னரான இசை வெளியீட்டு நிகழ்வின் காணொளி போன வருடம் பார்த்திருந்தேன். பாரதி பாஸ்கரும் இதில் ஒரு அறிமுகச் சிற்றுரை வழங்கியிருந்தார். சோழ வரலாறு தெரிய வேண்டிய அவசியம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிப்பதன் கடினத் தன்மையிலிருந்து இலகுவாகத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் நாவல், தேடி அறிந்து கொள்ளும் ஊக்கம் தரப்போகின்ற படம் பற்றி அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
என் ஆவல், யாராவது 'உடையார்', 'கங்கை கொண்ட சோழபுரம்' பற்றிக்கூறி, சரியான வரலாறு அறிய அந்த நாவல்களைப் படிக்குமாறு அறிவுறுத்த மாட்டார்களா என்றிருந்தது.
பாகம் இரண்டும் காட்சிப்படுத்தப்பட்டு விட்டது. படம் சம்பந்தமாக இதுவரை நான் பார்த்த எந்தவொரு காணொளியிலும் பாலாவின் இந்த நாவல்கள் பற்றி எவரும் குறிப்பிடவில்லையே என்பது எனது பெரும் ஆதங்கம்.

ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக இடம் இடமாகச் சென்று, கல்லுக் கல்லாய்த் தடவி, சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல்கள் கேட்டு, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து குறிப்புகள் எடுத்து என நீண்ட, நேரான முயற்சியில் பாலாவால் எழுதப்பட்டவை இந்த நூல்கள்.
பாலாவின் அனைத்து நூல்களுமே இவ்வாறுதான். உண்மை மட்டும் உரைப்பன!

கல்கி போலன்றி, பாலா பழுதற ஆராய்ந்து எழுதியவை இந்த நாவல்கள். ராஜராஜ சோழன் பயணித்த பாதையில் பயணித்து இடங்கள், மக்கள், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், உடை, போரின் சூட்சுமங்கள் ஆராய்ந்தவர். கதை மாந்தர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் என ஊகித்த சிலைகள் இவற்றைக் கொண்டு அவர்களின் இயல்புகளைத் தீர்மானித்துக் கதைக் களங்கள், உரையாடல்கள் அமைத்தவர்.

தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்திற்கான கல் சாரம் கட்டி ஏற்றியிருக்கவே முடியாதென்பதை அறுதியிட்டவர். வட்டச் சுற்றுக்களாக மண்ணும், சரளைக் கற்களும் சேர்த்து இறுக்கிக் கூம்பு வடிவமாகச் சுற்றுப் பாதை அமைத்து அதன் மூலம் விமானத்திற்கான பாறைகள் கொண்டு செல்லப்பட்டுப் பணிகள் நடந்ததை பாலா விபரித்திருப்பார். இந்த மண் மீண்டும் அள்ளப்பட்டுக் குவிக்கப்பட்ட மேட்டு நிலம் சென்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டவர்.

பாலா எழுதிய இந்த நாவல்களை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றிய ஆவணங்கள் (Documentary) எனலாம்.
மிக முக்கியமாகப் பெருவுடையார் கோயில் கட்டுமானம், அதன் கணக்கு வழக்குடன் துல்லியமாக விபரித்திருப்பார்.

தவிர, அரசியல், உளவு, போர், அரச குடும்பத்தினரின் உறவுச் சிக்கல்கள், மனப் போராட்டங்கள், இது எவ்வாறு நாட்டின் நிலையைப் பாதித்தது, குலங்களுக்கிடையான பூசல்கள், இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
அதிலும் இவற்றிலுள்ள பெரும்பாலான கதை மாந்தர்கள் உண்மையான பாத்திரங்கள்.

மிகவும் வியக்க வைத்தது பாலா எழுதிய ஒற்றர்கள் பற்றிய கதைச் சம்பவங்கள். எதிரி நாட்டின் மீதான உளவு, அரசக் கட்டமைப்பினுள்ளேயே அவர்களின் நலன், பாதுகாப்புக் கருதி ஒருவர் மீது ஒருவர் உளவு என்று நாவல் முழுவதும் நகர்ந்து செல்லும். சோழ தேசத்தின் வெற்றிக்குப் பிரதான காரணம் மிகச் சிறந்த இந்த உளவு வலையமைப்பே என்பதை அழுத்தமாகக் காட்டியிருப்பார். இங்கு பாலா தான் ஒருவர் ராஜராஜனின் ஒற்றராக, அநிருத்த பிரம்மராயரின் ஒற்றராக, ராஜேந்திரனின் ஒற்றராக, பஞ்சமாதேவியின் ஒற்றராக என எல்லாக் கோணங்களிலும் உளவுக்கு உளவு எனச் சம்பவங்கள் அமைத்துச் செல்லும் சிந்தனைத் திறன் அதிசயித்து மாளாது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டிய குஞ்சரமல்லர் என்கிற ராஜராஜப் பெருந் தச்சர், இடையில் விலகிச் சென்று பிற்பாடு கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய குணவன் என்கிற நித்த வினோதப் பெருந் தச்சன் பற்றிய தகவல்கள், சிற்பிகள் மறவர்கள் பிராமணர்களுக்கிடையிலான முரண்களும் காரணங்களும், ராஜராஜனின் குரு ஈசான சிவபண்டிதர், கருவூர்த் தேவர் பற்றி, அவரால் மருந்து காய்ச்சி ஆவுடையாரில் பொருத்தப்பட்ட சிவலிங்கம் பற்றி என முழுத் தகவல்களும் உன்னதமான நாவல்கள் வடிவில் இருக்க, ஊடகங்கள், காணொளிகள் அரைகுறையாகத் தகவல் பொறுக்கி விவாதிப்பது எப்போதாவது பார்க்க நேர்கையில் 'இது ஏன்?' என்ற விசனம் ஏற்படுகிறது.

சேரநாட்டு முன்குடுமி அந்தணர்கள் எவ்வாறு பாண்டிய ஆபத்துதவிகள் ஆனார்கள், இவர்களின் திறன், தந்திரம், தஞ்சாவூர் பிராமணர்களின் செருக்கு, தொண்டை நாட்டுப் பிராமணர்களின் கெட்டிக்காரத்தனம், ராஜராஜனிலிருந்து மாறுபட்டு ராஜேந்திரன் பிராமணர்களை அடக்கி, மறவர் கம்மாளர்களை உயர்த்தியது என ஏராளமான தகவல்கள்.
ரவிதாசனும், அவன் தம்பிமார் பரமேஸ்வரனும், சோமன் சாம்பவனும் ஆதித்த கரிகாலனைக் கொன்றதையும் இவர்களை மறைமுகமாக ஆதரித்த செம்பியன் மாதேவி பற்றியும் எந்தக் குழப்பமும் இன்றி எழுதியிருப்பார்.

ராஜராஜன் சூடாமணி விகாரத்திற்கு சாசனம் எழுதியதும், ஆதரித்ததும், இளைய மகள் மாதேவடிகள் எனும் நாமத்துடன் பௌத்த துறவியாகியதும், பௌத்த மதத்தில் வன்மம் விதைத்த ஸ்ரீ விஜயத்துத் (இந்தோனேஷியா) துறவிகள் பற்றியதுமான வரலாறு இந்த நாவல்களில் அடங்கியுள்ளது.

சோழர் ஆட்சியில் அதிகாரிச்சிகளான பெண்கள், ராஜராஜனின் மனைவி பஞ்சவன்மாதேவியின் பங்கு, ராஜேந்திரன் மனைவி வீரமாதேவி படை நடத்திச் செல்லுதல் என இவர்கள் பற்றிய விபரிப்பு இன்னொரு நாகரீகத்தைக் காட்டி நிற்கும்.

இங்கு சோழர்கள் என நன்மையை மட்டும் எழுதாமல், ஒரு அரசாங்கம், அதைச் சூழ்ந்து நடைமுறைப்படுத்தப்படும் நல்லது, கெட்டது, நீதி, அநீதி எல்லாமே விபரிக்கப்பட்டிருக்கும்.

சோழர்கள் பற்றி பாலா எழுதிய நாவல்களில் செறிந்துள்ள தகவல்கள், பாத்திரங்கள், உணர்வுகள், கதை அமைப்பு, இவற்றோடு பின்னியிருக்கும் தத்துவச் செறிவு இவையெல்லாம் பற்றிச் சொல்லிக்கொண்டு செல்வது முடிவை அணுகாது.

அன்றைய காவேரி போல எல்லாவற்றையும் அடக்கியும், பெருகியும், பொங்கியும், ஓடியும், நடந்தும் பயணப்பட்டுச் செல்வது பாலாவின் வரலாற்று நாவல்கள்.

'இவற்றைப் படியுங்கள்!' என உலகத்தோரிடம் உரத்துச் சொல்ல உள்ளம் தவிக்கிறது!

'சாதல் இனிது' மகாகவி பாரதியாரின் வசன கவிதையிலுள்ள இந்தச் சொற்றொடரைக் குறிப்பிட்டு, பாலா எம்மையெல்லாம் விட ஒருபடி மேலே சென்று இந்த நிலையையும் கண்டு விட்டார் என பாரதி பாஸ்கர் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பாலா மரணம் கடந்தவர். வாழும் போதே மரணித்தவனுக்கு, மரணத்தை ஜெயித்தவனுக்கு மரணமில்லை.
பாலா சொன்னதுதான்!
இதுவே 'செத்தாரைப் போலத் திரி' என்பது.
பாலா இத்தகையவர். சாதல் இனிதென்பதை வாழும் போதே அனுபமாகக் கொண்ட ஞானி.
நமக்குத்தான் சாதல் இனிதற்றது. ஏங்கி உருக வைக்கிறது.

ஒரு எழுத்தாளனை நினைக்கும் போது, அவன் வடித்த கதாபாத்திரங்களே நினைவுக்கு வரும். ஆனால் 'பாலா' என எண்ணும் கணத்தில் முகத்தின் ஒளியும், சுடர் மணிக் கண்களும், வெண் தாடியும், நிமிர்வும், குரலும், மாறா உற்சாகமும், மிக மிக நெருக்கமான உறவுப் பிணைப்பும் ஏன் தோன்றுகிறது?

"தி ஜானகிராமனை நினைக்கும் போது பாபுவும், யமுனாவும் நினைவுக்கு வர்றாங்க. பாலகுமாரனை நினைக்கும் போது பாலகுமாரன் தான் நினைவுக்கு வர்றாரு!" என்று பாரதி பாஸ்கர் சுட்டிக் காட்டியிருந்தார்.

காரணம், பாலாவின் உண்மையும், நேர்மையும்!
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமில்லாத மனிதன் என்கிற அந்த நிலை!

திருமகள் போல பெருக்கிடும் சத்தியம் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள்ள...

பாலா! எந்தையே! நீ எப்படி நினைக்கப்பட வேண்டுமென விரும்பினாயோ, இதோ அவ்வண்ணமே தினம் தினம் நினைக்கப்படுகிறாய்!

என்னப்பன் அல்லவா! என் தாயும் அல்லவா! பொன்னப்பன் அல்லவா! 🙏

(இன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மறைந்து ஆங்கிலத் திகதியின்படி ஐந்து வருடங்கள்.
திதி: வைகாசி அமாவாசை - 19/05/2023).
படித்ததில் பிடித்தது .

Want your public figure to be the top-listed Public Figure in Whitby?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Whitby, ON